திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்குப் பிறகு பிரசாதமான லட்டு மற்றும் நினைவாக தங்கம் மற்றும் வெள்ளி டாலர்களை வாங்குகிறார்கள். இந்த டாலர்கள் திருமலையில் ஏழுமலையான் கோயில் எதிரே உள்ள சிறப்பு கவுன்டரில் மட்டுமே பக்தர்களுக்கு கிடைக்கும். சமீபத்தில், தேவஸ்தானம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பக்தர்களுக்கும் பெருமாள் பத்மாவதி தாயார் உருவம் பொருத்திய தங்கம் மற்றும் வெள்ளி டாலர்களை ஆன்லைனில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் தேவஸ்தானத்தில் வருவாய் உருவாக்க ஒரு நிதிக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தங்கம், வெள்ளி டாலர்களின் விற்பனையை மேலும் அதிகரிக்க குழு பரிந்துரைத்துள்ளது. பக்தர்கள் இந்த டாலர்களை ஆன்லைனில் வாங்கிய பிறகு, அவற்றை இந்திய தபால் மூலம் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, இந்த டாலர்களுக்கு போக்குவரத்து காப்பீடு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த டாலர்களை மிகவும் கவர்ச்சிகரமான வடிவமைப்புகளில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் நிதிக் குழு தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி டாலர்களை விற்கவும் முன்மொழிந்துள்ளது. தேவஸ்தான அறங்காவலர் குழுவின் பரிந்துரைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஏழுமலையான் கோயில் தங்கம் மற்றும் வெள்ளி டாலர்களை விரைவில் பக்தர்கள் ஆன்லைனில் பெறலாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
