புதுடெல்லி: சிறையில் இருக்கும் மக்களவை எம்பி ரஷீத்துக்கு வருகின்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு நீதிமன்றம் பரோல் வழங்கி உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு தீவிரவாத நிதியுதவி வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் காஷ்மீரின் பாராமுல்லா தொகுதி சுயேட்சை எம்பி ரஷீத் கைது செய்யப்பட்டார்.
இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் டெல்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு டெல்லி நீதிமன்றம் காவலுடன் கூடிய பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கூடுதல் அமர்வு நீதிபதி சர்மா, பயணச்செலவுகள் மற்றும் பிற நிபந்தனைகள் குறித்து முன்னதாக விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
