தீபம் மாவட்டத்தை கபளீகரம் செய்யும் பாஜ; ஒதுக்கீடுக்கு முன்பே வேட்பாளர் அறிவிப்பு: களத்தில் குதித்த அன்பானவரின் மனைவி

திருவண்ணாமலை: சட்டப்பேரவை தேர்தல் களம் இப்போதே சூடு பிடித்திருக்கிறது. பாஜவின் மிரட்டலுக்கு பயந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் அதிமுக, அமமுக, அன்புமணி பாமக கட்சிகள் வந்துவிட்டன. ஏற்கனவே, புதிய நீதி கட்சி, ஐஜேகே போன்றவை ஒற்றை சீட்டுக்காக அங்கு ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதோடு, சில லெட்டர் பேட் கட்சிகளுக்கும் வலை வீசி வருகின்றனர்.

கூட்டணிக்குள் கட்சிகளின் எண்ணிக்கை கூடினாலும், அதிமுகவினர் முகத்தில் மட்டும் மகிழ்ச்சியில்லை. திகிலும், இருளும் கூடியிருக்கிறது. பூத்துல உட்காரவே ஆள் இல்லாத கட்சிகள் எல்லாம், எங்கள் உழைப்பில் குளிர்காய வருகிறார்களே என்ற ஆதங்கத்தில் அதிமுகவினர் குமுறுகின்றனர். குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே அதிமுக பலவீனமாக இருக்கிறது. அதிலும், பாஜ கூட்டணிக்குள் விழுந்துவிட்டதால், இன்னும் பலவீனமாகிவிட்டதாக அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளே கவலைப்படுகின்றனர்.

அதோடு, கையை முறுக்காத குறையாக தொகுதிகளை கேட்டு குறிவைக்கும் பாஜவின் அடாவடி இப்போதே தொடங்கிவிட்டதாம். அதனால், சிட்டிங் தொகுதிகளை விட்டு விட்டு வேறு தொகுதிகளை தேடுகின்றனர் அதிமுக மாஜி மந்திரிகள். கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையே தொடங்காத நிலையில், போளூர் தொகுதி பாஜவுக்குதான் என அக்கட்சியை சேர்ந்தவர்கள் பகிரங்கமாக பேச தொடங்கிவிட்டனர்.

பல கட்சிகளுக்கு தாவித்தாவி, கடைசியாக பாஜவில் அடைக்கலம் சேர்ந்துள்ள ஒருவர், பாஜ வேட்பாளர் என நிர்வாகிகள் கூட்டத்தில் பகிரங்கமாகவே அறிவித்துவிட்டனர். அதனால், போளூர் தொகுதியின் சிட்டிங் அதிமுக எம்எல்ஏவான மாஜி மந்திரி அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பக்கத்து தொகுதியான கலசபாக்கத்துக்கு மாற திட்டமிட்டிருக்கிறார். அதனால், அந்த தொகுதியில் நல்லது கெட்டதுக்கு போய் தலைகாட்டி வருகிறார்.

கலசபாக்கம் தொகுதியில் போன தேர்தலில் தோற்றதால், மீண்டும் அந்த தொகுதியில் அனுதாப அலை வீசும் என கணக்கு போட்டு காத்திருந்த மாஜி எம்எல்ஏ பன்னீர்செல்வம், தொகுதி மாறும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியால் அப்செட் ஆகியிருக்கிறார். கடந்த முறை தன்னுடைய வெற்றிக்கு குழிபறித்த அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு, இந்த தேர்தலில் பாடம் புகட்டாமல் விடமாட்டேன் என சபதமே செய்திருக்கிறாராம் பன்னீர்செல்வம். அதனால், கலசபாக்கம் தொகுதி இப்போதே கலவர தொகுதியாக மாறியிருக்கிறது.

அதோடு, திருவண்ணாமலை தொகுதியில் கடந்த 2011ல் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த மாஜி மந்திரி ராமச்சந்திரன், அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களிலும் சீட் கிடைக்காமல் ஒதுக்கியிருந்தார். இப்போது, திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளராக இருப்பதால் எப்படியும் சீட் உறுதி என நம்புகிறார். ஆனாலும், இதுவரை ஒருமுறைகூட அதிமுக வெற்றி பெறாத திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடாமல், சாதி வாக்குகளை நம்பி கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு போகலாமா என திட்டமிட்டிருக்கிறாராம் ராமச்சந்திரன்.

அதற்காக, மாஜி மந்திரி கே.பி.முனுசாமி மூலம் காய் நகர்த்துகிறாராம். ஆனால், கீழ்பென்னாத்தூர் தொகுதி மீது அன்புமணியின் மனைவி சவுமியாவின் பார்வை பட்டிருப்பதால், அதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட மாஜி மந்திரி தயக்கம் காட்டுவதால், அந்த தொகுதியை வழக்கப்படி கூட்டணிக்கு தள்ளிவிடலாம் என திட்டமிட்டிருக்கிறாராம் எடப்பாடி.

அதேபோல், எம்பி தேர்தலில் தொடர்ந்து தோல்வியடைந்து சோர்ந்துவிட்ட ஏசிஎஸ், இந்தமுறை பாஜ கூட்டணியில் சொந்த ஊரான ஆரணிக்கு வரலாமா அல்லது அனுதாப அலையை நம்பி வேலூரிலேயே நிற்கலாமா என்ற தடுமாற்றத்தில் இருக்கிறாராம். அதனால், ஆரணி தொகுதியின் சிட்டிங் அதிமுக எம்எல்ஏவான மாஜி மந்திரி சேவூர் ராமச்சந்திரனுக்கு சீட் கேள்விக்குறியாகி இருக்கிறது. எப்போதும் கழுவுற மீனில் நழுவுற மீன் என பேர் எடுத்தவர் சேவூர் ராமச்சந்திரன்.

பாஜ கூட்டணிக்கு வந்திருப்பதால், போனமுறை வாங்கின ஓட்டும் இப்போது கிடைக்காது என்பதால், சீட் வாங்காமல் ஒதுக்கியிருப்பதே நல்லது என்பதே அவரது மைன்ட் வாய்ஸ் என்ற பேச்சும் அடிபடுகிறது. எது எப்படியானாலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக மாஜி மந்திரிகளுக்கு, புதிய கூட்டணி கலக்கத்தையே ஏற்படுத்தியிருக்கிறது என அந்த கட்சியினர் புலம்பல் வெளிப்படையாகவே தெரிகிறது.

Related Stories: