*கிலோ ரூ.20க்கு விற்பனை
போச்சம்பள்ளி : சாமந்தி பூக்களை வாங்க வியாபாரிகள் யாரும் முன்வராததால் சாலையோரம் மலை போல் பூக்களை குவிந்து வைத்து விவசாயிகள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் சீதோஷ்ண நிலை மலர் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு கை கொடுத்து வருகிறது. இப்பகுதியில் சாமந்தி, குண்டுமல்லி, செண்டுமல்லி உள்ளிட்ட மலர்கள் மற்றும் பண்டிகை கால விற்பனையை அடிப்படையாக கொண்டு, பல்வேறு மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள்.
இங்கு அறுவடை செய்யப்படும் மலர்கள் ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் உள்ளூர் சந்தைக்கு விவசாயிகள் எடுத்துச்சென்று விற்பனை செய்கிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து, விவசாயிகளிடம் பூக்களை கொள்முதல் செய்து வருகிறார்கள். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி, மற்றும் ஆயுத பூஜை, தீபாவளி நாட்களில் சாமபந்தி பூக்கள் கிலோ ரூ.75 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.
நாளுக்குநாள் பூக்களின் விளைச்சல் அதிகரித்து வருவதால், விலை குறைந்தது. கடந்த சில நாட்களாக சாமந்தி பூ கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் வரத்து அதிகரித்ததால், வியாபாரிகள் சாமந்தி வாங்க முன்வரல்லை. இதனால் வேதனையடைந்த விவசாயிகள், வேறு வழியின்றி தங்கள் தோட்டத்தில் சாகுபடி செய்த சாமபந்தி பூக்களை, டிராக்டர் மூலம் அழித்து நிலத்திற்கு உரமாக்கினர்.
இந்நிலையில், சாமந்தி பூக்களை பறித்து, மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் சாலையோரம் பூக்களை குவித்து வியாபாரம் செய்து வருகிறார்கள். இங்கு ஒரு கிலோ சாமந்தி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், வழக்கத்தை காட்டிலும் விலை குறைவாக விற்பனையாவதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஜம்புகுடப்பட்டி கிராமத்தை சேர்ந்த பூ விவசாயி அன்பு கூறுகையில், ‘சாமந்தி பூக்களின் விலை சரிந்து விட்டதால், பூக்களை அறுவடை செய்யமால் அப்படியே விட்டுள்ளோம். சில விவசாயிகள் வந்த விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.
பூ அறுப்பு வேலைக்கு நபருக்கு ரூ.300 கூலி தருகிறோம். இது தவிர பாரம் ஏற்று கூலி, வண்டி வாடகை, இறக்கும் கூலி உள்ளிட்டவற்றை கணக்கு பார்த்தால் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. தமிழக அரசு சாமந்தி பூ விவசாயிகள் நலன் கருதி போச்சம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு செண்ட் பேக்டரி அமைக்க வேண்டும்,’ என்றார்.
