பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

*மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்

*அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர் : பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களின் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் மிருணாளினி தொடங்கி வைத்தார்.இந்தியத் தேர்தல் ஆணைய உத்தரவின்படி, ஆண்டு தோறும் ஜன.25ம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப் படுகிறது.

அதனடிப்படையில் இந்த ஆண்டிற்கான தேசிய வாக்காளர் தினம் நாளை (25 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளென்பதால், பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டது.

16வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியயை பெரம்பலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரான, மாவட்டக் கலெக்டர் மிருணாளினி, பெரம்பலூர் நகராட்சி, ரோவர் ஆர்ச் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் உருவான தினமான ஜனவரி 25ம் நாள் தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது. இந்த தினத்தின் முக்கிய நோக்கமே வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவித்தல், புதியதாக தகுதி பெற்ற இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்டவையாகும்.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் தினம் சிறப்பாக கொண்டாடவேண்டும். தேசிய வாக்காளர் தினமான ஜன.25ம்தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் 23ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்திட தொடர்புடைய அலுவலர்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திருந்தார்.

இதனையடுத்து தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக ரங்கோலி வரைதல், தேர்தல் பாடல் பாடுதல், விநாடி வினா, கட்டுரைப் போட்டி உள்ளிட்ட விழிப்புணர்வு போட்டிகளை நடத்த வேண்டும். தேசிய வாக்காளர் தினத்தன்று மாவட்ட நூலக வாசகர் வட்ட உறுப்பினர்களை பெருந் திரளாக கலந்து கொள்ளச் செய்தல், வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்துதல், வாக்களிப்பதே சிறந்தது, நிச்சயம் வாக்களிப்பேன் என்ற தலைப்புகளில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடையே பேச்சுப் போட்டி நடத்துதல் ஆகிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகளை நடத்திட அலுவலர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டு 16 வது தேசிய வாக்காளர் தினத்தை சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி அறிவுறுத்திருந்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனடிப் படையில் நேற்று ரோவர் கல்லூரியயைச் சேர்ந்த 300 மாணவ, மாணவிகளும், ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரியைச் சேர்ந்த 300 மாணவ, மாணவிகளும், தனலட்சுமி கல்லூரியைச் சேர்ந்த 500 மாணவ, மாணவிகளும், என மொத்தம் சுமார் 1,100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ரோவர் ஆர்ச் பகுதியில் தொடங்கிய இந்தப்பேரணி சங்குப்பேட்டை, பாலக்கரை வழியாக பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் முடிவுற்றது. பேரணியின் போது, மாணவ, மாணவிகள் நமது வாக்கு நமது உரிமை, வாக்களிப்பது சிறந்தது, நான் நிச்சயம் வாக்களிப்பேன், எனது இந்தியா எனது எனது பாரதம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு நடந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் பேரணி முடிவுற்ற நகராட்சி அலுவலகத்தில், தேசிய வாக்காளர் தின உறுதி மொழியினை மாவட்டக் கலெக்டர் மிருணாளினி வாசிக்க பேரணியில் கலந்து கொண்ட இளம் வாக்காளர்கள் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 16-வது தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் உறுதி மொழியினை மாவட்டக் கலெக்டர்வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சொர்ண ராஜ், தனி தாசில்தார் (தேர்தல்) அருளானந்தம், பெரம்பலூர் தாசில்தார் பாலசுப்ரமணியன் உள்ளி ட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: