மண்டல அளவில் மருத்துவ மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

கோவை : கோவை நேரு ஸ்டேடியத்தில் பிபிஜி பிசியோதெரபி கல்லூரி மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் “அடுகளம் 2.0” என்ற மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது.

போட்டியை பிபிஜி கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எல்.பி. தங்கவேலு தலைமை தாங்கி துவங்கி வைத்தார். விழாவில் பிபிஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சாந்தி தங்கவேலு, துணைத்தலைவர் அக்சய் தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அஸ்வின் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அஸ்வின் கலந்து கொண்டார்.

இதில், பிபிஜி பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் டாக்டர் சிவகுமார் வரவேற்றார். மூன்று நாட்கள் நடைபெறும் போட்டியில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில், எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவ பிரிவுகள் மட்டுமின்றி, பிசியோதெரபி, நர்சிங், பார்மசி மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த சுமார் 3,800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முதல் நாளான நேற்று ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற போட்டிகள் நடந்தன.

Related Stories: