திருமலை: ஆந்திராவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் பயன்படுத்த தடைவிதிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா நாட்டு அரசாங்கம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிக்டாக், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஸ்னாப்சாட் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை செய்துள்ளது. இந்த விதிகள் கடந்த டிசம்பர் 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தன.
புதிய விதிகள் அமலுக்கு வந்த பிறகு, பயனர்கள் குறைந்தது 16 வயதுடையவர்கள் என்பதை சரிபார்க்க சம்பந்தப்பட்ட நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இருப்பினும், சில தளங்கள் இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. இந்நிலையில், இதுபோன்ற ஒரு சட்டம் ஆந்திரப் பிரதேசத்திலும் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.
டாவோஸ் சுற்றுப்பயணத்தில் உள்ள அமைச்சர் நாரா லோகேஷ் இதுகுறித்து பேசியதாவது: ஆஸ்திரேலிய அரசாங்கம் சமீபத்தில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதைத் தடை செய்தது. ஆந்திரப் பிரதேசத்திலும் இதேபோன்ற சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து பரிசீலினை நடக்கிறது. ஒரு மாநில அரசாக ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்திய சட்டத்தையும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.
இதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நம்புகிறேன். குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட இளைஞர்கள் அதன் உள்ளடக்கத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. எனவே இதுபோன்ற தளங்களில் இருக்கக்கூடாது. வலுவான, சட்ட கட்டமைப்பு தேவைப்படலாம். எனவே அந்த திசையில் நாங்கள் யோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
