பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனி தீர்மானத்தை பிரதமர் மோடியிடம் எடப்பாடி எடுத்துச் சொல்லி இருப்பார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பாக கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்த பின்னர், இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பேசியதாவது:

கூட்டாட்சி தத்துவத்திற்கு சவால் விடுகிற வகையிலும், ஏழையெளிய, பிற்படுத்தப்பட்ட விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களுடைய சமூகப் பாதுகாப்பு தகர்ந்திடும் விதத்திலும் கொண்டுவரப்பட்டுள்ள ஒன்றிய அரசினுடைய இந்த புதிய திட்ட நடவடிக்கைக்கு எதிராக, நமது அரசால் முன்வைக்கப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தின் மீது, உறுப்பினர்கள் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஜவாஹிருல்லா, கு.சின்னப்பா, கே.மாரிமுத்து, ம.சின்னத்துரை, மு.பாபு, ஜி.கே.மணி, செல்வப்பெருந்தகை, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆகியோர் தங்கள் கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். அதற்காக முதலிலே அவர்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு (நேற்று) பிரதமர் வருகிற காரணத்தால், எதிர்க்கட்சி தலைவர் (எடப்பாடி), அவரை சந்திக்க சென்றிருக்கிறார். இதே கருத்தை, அவர் பிரதமரை சந்திக்கும்போது எடுத்துச் சொல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எப்படி எதிர்க்கட்சி துணைத் தலைவர், இந்த தீர்மானத்தின் மீது கருத்துகளை எடுத்து வைத்தாரோ, அதே அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர், பிரதமரிடத்திலே கருத்துகளை எடுத்து வைத்து, நிச்சயமாக வழிமொழிந்து பேசுவார் என்று எதிர்பார்க்கிறேன். நான் மட்டுமல்ல;

இங்கே இருக்கக்கூடிய நீங்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். தமிழ்நாட்டு மக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, எதிர்க்கட்சி துணைத்தலைவர் பேசுகையில், ஏதோ ஒரு தோற்றத்தை உருவாக்கக்கூடிய வகையிலே இந்த தீர்மானம் இங்கே கொண்டு வரப்பட்டிருக்கிறது என்ற ஒரு செய்தியை எடுத்துச் சொல்லி, அதை பதிவு செய்திருக்கிறார். ஆனால், கிராமப்புற மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அவர்கள் முதலிலே தெரிந்து கொள்ள வேண்டும்.

எது எப்படியிருந்தாலும், நான் அதைப்பற்றியெல்லாம் அதிகம் விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால், அதேநேரத்தில் குறை சொல்லி, ஏதோ ஒரு தோற்றத்தை கொண்டுவருவதாக சொல்லியிருந்தாலும், அதுவும் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இருந்தாலும், நாம் கொண்டிருக்கக்கூடிய கொள்கையிலே ஏதோ உறுதியாக இருப்பதை போன்று தோன்றுகிறது. அப்படி தோன்றக்கூடியதை உறுதி செய்யக்கூடிய வகையில் நிச்சயமாக பிரதமரிடத்திலே, எதிர்க்கட்சி தலைவர் எடுத்துச் சொல்வார் என்ற நம்பிக்கையோடு, இந்த தீர்மானத்தை பேரவைத் தலைவர் நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: