நலத்திட்டங்கள் சென்றடையும் வகையில் சமூகநீதி ஆணையம் அமைக்க வேண்டும்: விசிக எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் வலியுறுத்தல்

சென்னை: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ சிந்தனைச்செல்வன் பேசியதாவது: காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு சிறு விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டுள்ளதற்கு நன்றி. பேரவைத் தலைவர் ஆசிரியர் என்பதை நான் அறிவேன். தங்களை அதிகார மையமாக கருதிக் கொண்டிருக்கிற ஆளுநருக்கும்கூட அவர் பாடத்தை நடத்துவார் என்பதை கடந்த 20ம் தேதி பார்த்து நான் வியந்தேன்.

இந்த அவையிலே மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைத் தவிர வேறு யாருக்கும் கருத்து சொல்ல அனுமதி கிடையாது என்று ஆளுநரை வைத்துக்கொண்டு, பேரவைத் தலைவர் சொன்னபோது, உண்மையிலேயே விடுதலைத் திருநாளிலே மக்கள் மத்தியிலே எத்தகைய மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குமோ, அந்த மகிழ்ச்சியை அந்தத் தருணத்தில் இந்த மாமன்றத்திலிருந்து அத்தனை பேரும் உணர்ந்தார்கள்.

திருவள்ளுவர், திருக்குறள் தமிழ் பேசும் மன்னர்களால்கூட கொண்டாடப்படவில்லை. திராவிட இயக்கம் வந்தபிறகுதான் திருக்குறள் என்பது இந்த தமிழகத்திலே அறியப்பட்ட தமிழர்களின் பேரிலக்கியமாக முன்னே நிறுத்தப்பட்டு தமிழர்களுக்கு சர்வதேசப் பெருமை கிடைத்திருக்கிறது. பல்வேறு நலத் திட்டங்களை நாம் உருவாக்கி இருக்கிறோம். ஆனால், அந்த நலத் திட்டங்கள் முழுமையாக பயனாளிகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறதா என்பதைப் பார்க்கக்கூடிய எந்த அமைப்பும், எந்த வழிமுறையும் நம்மிடத்திலே இல்லை.

அதனால்தான் 2007-லிலே கலைஞர் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கியிருக்கிறார். ஆனால், இன்றுவரை அதற்கு பட்டா மாற்றம் தரப்படவில்லை என்கிற கோரிக்கை நம்மிடத்திலே வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, நீங்கள் கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தியிருக்கிற அத்தனை திட்டங்களையும் சமூக தணிக்கை செய்வதற்கான சமூக நீதி ஆணையம் உருவாக்கித் தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: