சென்னை: கிழக்கு திசையில் இருந்து வளி மண்டல காற்றின் அலை வீசுவதாலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டு இருப்பதாலும் தமிழக கடலோரத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. இருப்பினும், தஞ்சாவூர், நீலகிரி, ஈரோடு, கரூர், கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், திருப்பத்தூர், திருச்சி, தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ள வளி மண்டலத்தில் இருந்து காற்றலை வீசி வருகிறது. அத்துடன் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக நேற்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது.
வெந்நிலையை பொருத்தவரையில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். ஓரிரு இடங்களில் மேலும் சற்று குறையவும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மேலும், இன்றும் நாளையும், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். வங்கக் கடல் பகுதியில் இன்று தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு -மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும்.
