தேர்தல் கூட்டணி ஒரு வாரத்தில் முடிவு: கிருஷ்ணசாமி தகவல்

கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அடுத்த ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார். புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், வழக்கத்துக்கு மாறாக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே தேர்தல் பரபரப்பு தொற்றி இருக்கிறது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்கி இருக்கின்றன. கூட்டணி குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. யாருடன் கூட்டணி என்பது குறித்து கலந்துபேசி வருகிறோம். வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டி, கொள்கை ரீதியான ஆட்சி அமைக்கும் வகையில் திட்டங்களை வகுத்து வருகிறோம். புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாட்டை அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள் தெளிவுபடுத்துவோம்.

புதிய தமிழகம் கட்சி, அதிகாரப்பூர்வமான முறையில் எந்த கட்சியையும் அணுகவில்லை. கூட்டணி ஆட்சி என்ற நிலைப்பாடுகளுக்குள் நாங்கள் இப்போது போகவில்லை. திறந்த மனப்பான்மையுடன் இருக்கிறோம். எந்தவிதமான குழப்பத்திலும் இல்லை. புதிய தமிழகம் கட்சியின் ஆதரவு இல்லாமல், தென்தமிழகத்தில் யாரும் வெற்றிபெற முடியாது. இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

Related Stories: