கோவில்பட்டி, ஜன. 24: கோவில்பட்டி அருகே காணாமல் போன மூதாட்டி ஊரணியில் சடலமாக மீட்கப்பட்டார். கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி தாமஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி மனைவி பாக்கியலட்சுமி (75). வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டு வந்த இவர், மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாக்கியலட்சுமியை நேற்று காலை பார்த்த போது காணவில்லை. இதைத்தொடர்ந்து அவரது மகன் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் பாக்கியலட்சுமியை தேடினர். அப்போது அங்குள்ள ஊரணி அருகே பாக்கியலட்சுமியின் சேலையின் கிழிந்த துணி இருந்துள்ளது. இதைப்பார்த்து சந்தேகமடைந்த உறவினர்கள். அங்குள்ள ஊரணியில் இறங்கி தேடினர். மேலும் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஊரணியில் தேடி இறந்த நிலையில் கிடந்த பாக்கியலட்சுமியின் சடலத்தை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
