செய்துங்கநல்லூர், ஜன. 24: முறப்பநாட்டில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் போதுமான இருக்கை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே கட்டி முடிக்கப்பட்ட புதிய அலுவலகத்தை திறக்க நடவடிக்கை வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராமத்தில் வாடகை கட்டிடத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சொத்துக்களை பதிவு செய்வதற்கு தினமும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அலுவலகத்தில் 5 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டு உள்ளதால் வரும் பொதுமக்கள் அனைவரும் இருக்க இடமின்றி தெருக்களில் ஆங்காங்கே மரத்தடியில் நின்று கொண்டிருக்கும் அவலநிலை தொடர்ந்து வருகிறது. முதியவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கும் சூழல் இருப்பதால் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த புதிய பத்திரப் பதிவு அலுவலகம் கட்டும் பணிகள் நிறைவடைந்த நிலையில் இந்த கட்டிடம் எப்போது திறக்கப்படும் என பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது. வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் போதுமான இருக்கை வசதிகள் இல்லாததால் புதிய கட்டிடத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது. அதுவரை வாடகை கட்டிடத்தில் இயங்கும் அலுவலகத்தில் போதுமான இருக்கை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
