- தைபுசா விழா
- நெல்லை டவுன் நெல்லியப்பார் கோயில்
- நெல்லா
- நெலால டவுன்
- நெல்லையப்பார் கோயில்
- சுவாமி
- நெல்லை டவுன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தேவரம் பாடல்
நெல்லை: நெல்லை டவுன் நெல்லையப்பர் திருக்கோவில் தைப்பூச திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் மிகப்பெரிய பழமையான சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், தேவாரம் பாடப்பட்ட திருத்தலமாகவும் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் உள்ளது. நெல்லை பெயர் வரக்காரணமான நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லையப்பர் திருக்கோயிலில் இவ்வாண்டுக்கான தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது.
12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் தொடக்கமாக நடைபெற்ற கொடியேற்ற விழாவையொட்டி கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு திருவனந்தல் வழிபாடு, கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கொடிபட்டம் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி முன்புள்ள விநாயகர் கொடிமரத்தில் கொடி பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து திருக்கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு மஞ்சள், பால், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
12 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் நான்காம் திருநாளான ஜனவரி 26ம் தேதி அன்று திருநெல்வேலி என பெயர் வர காரணமான சுவாமி நெல்லையப்பர் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் திருவிழா நடக்கிறது. 10ம் திருநாள் பிப்ரவரி 1ம் தேதி அன்று நெல்லை சிந்துபூந்துறை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள தைப்பூச தீர்த்த வாரி மண்டபத்திற்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11ம் நாளான பிப்ரவரி 2ம் தேதி சௌந்தர சபையில் நடராஜ பெருமான் காட்சியும், 12ம் திருநாளான பிப்ரவரி 3ம் தேதி நெல்லையப்பர் கோவில் வெளித்தெப்பத்தில் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை ேகாயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
