மதுரை: மதுரை மாவட்டம், அழகர்கோவில் மலைமேல் இயற்கை எழில் நிறைந்த பகுதியில் சோலைமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூசத் திருவிழா முக்கியமானதாகும். இதன்படி இந்தாண்டு தைப்பூசத் திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. காலை 9.55 மணிக்கு மேளதாளம் முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கோயிலில் உள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதை தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், சந்தனம், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
கொடிமரம், நாணல் புல், வண்ண மலர் மாலைகள் மற்றும் பட்டாடைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்போது உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி கொடிமரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு புறப்பாடாகி கோவிலின் 4 பிரகாரங்களிலும் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் வலம் வந்தார். அதனை தொடர்ந்து நாளை காலை அனைத்து யாகசாலை பூஜைகளும் நடைபெறும். பின்னர் மாலையில் அன்னவாகனம், 25ம் தேதி மாலை காமதேனு வாகனம், 26ம் தேதி மாலை ஆட்டு கிடா வாகனம், 27ம் தேதி பூச்சப்பரம், 28ம் தேதி யானை வாகனம், 29ம் தேதி மாலையில் பல்லக்கு, 30ம் தேதி குதிரை வாகனம், 31ம் தேதி வெள்ளி மயில்வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
பிப்.1ம் தேதி தீர்த்தவாரியும், தைப்பூச அபிஷேகவிழாவும் உள்பட பல நிகழ்வுகள் நடைபெறும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
