வைகை அணை நீர்மட்டம் 69 அடியாக குறைவு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை

ஆண்டிபட்டி, ஜன. 29: ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்ததால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இதனால் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட முதல்போக பாசனத்திற்கும், ஒருபோக பாசனத்திற்கும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

வைகை அணையில் இருந்து அதிக தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து கொண்டே வந்தது. பின்னர் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டதும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த 16ம் தேதி முழுகொள்ளளவான 69 அடியை எட்டியது. நீர்மட்டம் 69 அடியை எட்டியதும் அணைக்கு வரும் நீர், உபரிநீராக வெளியேற்றப்படும்.

ஆனால் இந்த ஆண்டு அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் தேவையான அளவு சென்று விட்டதால் அணை நீர்மட்டத்தை 71 அடியாக உயர்த்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அணையின் நீர்மட்டமும் 70.39 அடியாக உயர்ந்தது. பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 69.37 அடியாக குறைந்துள்ளது. கடந்த 17ம் தேதி 2593 கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 1072 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 1369 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.

Related Stories: