சிவகாசி, ஜன. 23: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் சித்திரைகனி (46). இவர் சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகின்றார். இவரது கடைக்கு நேற்று காலை நான்கு மூட்டை உருளைக்கிழங்கு வந்துள்ளது. இதனை சித்திரைகனி கடையின் வெளியே வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது 4 மூட்டை உருளைக்கிழங்கு திருடு போயிருந்தது. உடனடியாக அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை பார்க்கும்போது அதே மார்க்கெட்டில் வேலை பார்த்து வரும் சிவகாசி அருகே நாரணாபுரம் நடுத்தெருவை சேர்ந்த கேசவகுமார்(41) உருளைக்கிழங்கு மூட்டைகளை திருடி செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து கேசவகுமாரை கைது செய்தனர்.

