புதுடெல்லி: நாடு முழுவதும் நடக்கும் அனைத்து பொதுக்கூட்டங்களுக்கும் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. நாடு முழுவதும் பெரிய அளவில் நடைபெறும் பொதுக்கூட்டங்களின் போது கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்புக்காக ஒரு வழிகாட்டு நெறிமுறையை உருவாக்கி செயல்படுத்தும் படி ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி,‘சிலர் தங்களது அடிப்படை உரிமைகள் பயன்படுத்தி தலைநகர் டெல்லியில் தர்ணாவில் ஈடுபடுகிறார்கள் என்றால், அதனை ஒழுங்குபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் முடியும். இதில் உதாரணத்துக்காக கூறினால், சென்னையில் ஒரு பேரணி நடைபெறுகிறது, அதற்கு 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வசதி இருக்கும் நிலையில், குறிப்பிட்ட எண்ணிக்கை மக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என டெல்லியில் இருந்து ஒரு உத்தரவை பிறப்பிக்கும் பட்சத்தில் அதை மீறி ஐம்பதாயிரம் பேர் பங்கேற்க குவிந்தால் அவர்களை என்ன செய்வது எப்படி கட்டுப்படுத்த முடியும். அது சாத்தியமற்றது’ என்று கேள்வியெழுப்பினார்.
இதையடுத்து தலைமை நீதிபதிகள் உத்தரவில்,’இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் ஒரு சில நிகழ்வை வைத்து மட்டும் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை நாடு முழுவதும் வகுக்க இயலாது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக உரிய அமைப்பிடம் தான் கோரிக்கை வைக்க வேண்டும். தேர்தல் பரப்புரை கூட்டங்கள் ஆக இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் இதனை மனுவாக அளிக்கலாம். பொது இடங்களில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் பொறுப்பு ஆகும்.
அவர்கள் தேர்தல் கமிஷனுடன் இணைந்து ஒரு கொள்கை சார்ந்த வழிகாட்டு முறைகளை எடுக்க வேண்டும். அதில் பாதுகாப்பு நடைமுறையும் நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டும் .அதனை அடிப்படையாக கொண்டு புதிய மனு தயாரித்து இதுதொடர்பான உரிய அமைப்பிடம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்கும்’ என தெரிவித்த நீதிபதிகள், இதுதொடர்பான வழக்கை முடித்து வைத்தனர்.
