கொல்கத்தா: கொல்கத்தாவிற்கும், அசாமின் காமாக்யாவிற்கும் இடையே புதிதாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலில் அசைவ உணவு இடம் பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: மேற்கு வங்கத்தில் புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தொடங்கப்பட்டுள்ளது பற்றி பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஆனால் அசைவ உணவை விரும்பும் இரண்டு பகுதிகளை இணைக்கும் ஒரு ரயில் இப்போது சைவ விருப்பங்களை மட்டுமே வழங்குகிறது. இது ஒரு கலாசார திணிப்பு ஆகும். முதலில் அவர்கள் எங்கள் வாக்குகளை கண்காணித்தனர். இப்போது மக்களின் உணவு தட்டுக்களை கண்காணிக்கின்றனர். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
