மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில் விதவை மகள் திருமண நிதியுதவி ரூ.40 ஆயிரமாக உயர்வு அரசாணை வெளியீடு

புதுச்சேரி, ஜன. 22: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடுத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் விதவை மகள் திருமண நிதியுதவி ரூ. 40 ஆயிரமாக உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் விதவை மகளின் திருமண நிதியுதவி திட்டம் கடந்த 1981ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் விதவை மகளின் திருமணத்துக்கான நிதியுதவியை உயர்த்த வேண்டுமென சட்டசபையில் அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியது. இதனையேற்று கடந்த மார்ச் மாதம் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில், விதவை மகளின் திருமணத்துக்கான நிதியுதவியானது ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ. 40 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இதற்கிடையே சட்டசபையில் அறிவிக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை, குடும்பத்தலைவிகளுக்கான நிதியுதவி என பல்வேறு நிதியுதவி திட்டங்களுக்கான நிதியுதவியை அதிகரித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதேபோல் விதவை மகளின் திருமண நிதியுதவி திட்டத்தின் தொகை உயர்த்தி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆதரவற்ற விதவைகளின் மகள்களின் திருமணத்துக்கான நிதி உதவியை உயர்த்தி ஆணையிட்டுள்ளார். 1981ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆதரவற்ற விதவைகளின் மகள்களின் திருமணத்துக்கான திருமண உதவித்தொகை வழங்குதல் விதிகள் கூடுதல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகள் ஆதரவற்ற விதவைகளின் மகள்களின் திருமணத்திற்கான திருமண உதவித்தொகை வழங்குதல் (திருத்தம்) விதிகள், 2026 என அழைக்கப்படலாம். இது புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதற்கும் பொருந்தும். இது அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து புதுச்சேரி முழுவதும்நடைமுறைக்கு வரும்.

மேற்கூறிய விதிகளில், விதி 5 இல், ரூ. 30,000 (முப்பதாயிரம் ரூபாய் மட்டும்)” என்ற சொற்களுக்கும் எண்களுக்கும் பதிலாக, ரூ. 40,000 (நாற்பதாயிரம் ரூபாய் மட்டும்) என்ற சொற்களும் எண்களும் மாற்றீடு செய்யப்படும்.
பயனாளியின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில், பொது நிதி மேலாண்மை அமைப்பு மூலம்நேரடிப் பணப் பரிமாற்றம் முறையில் பணம் செலுத்தப்படும். இது நிதித்துறையின் ஒப்புதலுடன், இதற்கான ஆணையை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பு செயலர் முத்துமீனா வெளியிட்டுள்ளார்.

Related Stories: