விஜய் பிரசார கூட்டத்தில் 41பேர் பலியான விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அறிக்கை தயார்: சிபிஐ அதிரடி நடவடிக்கை

 

புதுடெல்லி: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும் 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. இதையடுத்து இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், கடந்த அக்டோபர் மாதம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. அதன்படி முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவின் கண்காணிப்பில், சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

அதேப்போன்று சம்பவம், தொடர்பாக த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக கரூர் துயர சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பிஐ தலைமை அலுவலகத்தில் இரண்டு முறை விஜய் நேரில் ஆஜராகி விளக்கம் மற்றும் வாக்குமூலங்களை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதுபோன்ற சூழலில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கானது வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் கரூரில் த.வெ.க பிரசார கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரம் தொடர்பாக, விஜய் மற்றும் அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணை, அதேப்போன்று சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தது மற்றும் கிடைக்கபெற்ற ஆதாரங்கள், வாக்குமூலங்கள், போலீசார் தரப்பில் வழங்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் ஆகிய அனைத்தையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐ தரப்பில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த ஓரிரு தினங்களில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்யும் நடவடிக்கையை முடிக்கும் என்று தெரியவருகிறது.

Related Stories: