×

யூடியூப் பார்த்து வெங்காரம் உண்டு மாணவி பலி;‘என்னைய விட்டுராதீங்கப்பா… காப்பாத்துப்பா என கதறிய மகள்’

மதுரை: யூடியூப் பார்த்து வெங்காரம் உண்ட மாணவி பலியான சம்பவத்தில் தந்தை மகள் கடைசியாக பேசியது பற்றி கூறியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்த வேல்முருகன் – விஜயலட்சுமியின் மகள் கலையரசி(19). கல்லூரி முதலாமாண்டு மாணவி. இவர் பெற்றோரிடம், உடல் பருமனை குறைக்க வேண்டுமென கூறி வந்துள்ளார். கடந்த வாரம், ‘இணைவோம் இயற்கையுடன்’ என்ற யூடியூப் பக்கத்தில் உடல் எடை குறையாதவர்களுக்கு கொழுப்பை கரைய வைத்து உடலை மெலிதாக்கும் வெங்காரம் என்ற தலைப்பில் பதிவிட்டிருந்த வீடியோ பதிவை பார்த்துள்ளார். இதையடுத்து கடந்த 16ம் தேதி நாட்டு மருந்து கடைக்கு சென்று ‘வெங்காரம்’ என்ற நாட்டு மருந்தை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து கலையரசிக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டது. உடனே, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தவருக்கு மீண்டும் அதிகளவு வயிறு வலித்துள்ளது. உடல்நிலையும் கடுமையாக பாதித்துள்ளது. அடுத்தடுத்து தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றும் சரியாகாததால், மதுரை அரசு மருத்துவமனைக்கு கலையரசியை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், கலையரசி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். சம்பவம் குறித்து செல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளை இழந்தது குறித்து தந்தை வேல்முருகன் கூறுகையில், ‘‘எனது மகள் உடல் பருமனாக இருப்பதாக உணருகிறேன் அப்பா. உடல் எடையை குறைக்கலாம் என யூடியூப்பில் உள்ளது எனக் கூறினாள். இல்லப்பா. அப்படியெல்லாம் சாப்பிடக் கூடாதுப்பா. அவர்கள் ஏதாவது கூறுவார்கள், ஆனால் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் சாப்பிடக் கூடாதுப்பா என நான் சொன்னேன். இல்லப்பா யூடியூப்பில் பார்த்தேன். வெங்காரம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்று கூறுகின்றனர் என்றாள். அதை சாப்பிட்டபோது அளவு ஏதோ கூடி விட்டதாக தெரிகிறது. அரை மணிநேரத்திலேயே வாந்தி, வயிற்றுப்போக்கு என அனைத்தும் வந்துவிட்டது. அவளின் உடலும் சோர்வாகி விட்டது.
உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றோம். குளுக்கோஸ் ஏற்றிய பிறகு நார்மலானது.

வீட்டிற்கு வந்த பிறகு மறுபடியும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். சிகிச்சை எடுத்து விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தோம். மீண்டும் உடல்நிலை மோசமானது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அப்போது, வயிறு வலிக்குதுப்பா… ரத்தமா வருதுப்பா… என்னைய விட்டுராதப்பா… காப்பாத்துப்பா என கதறி அழுதாள். ஆனால், அவள் எங்களை விட்டு பிரிந்தார். சமூக வலைதளங்களை பார்த்து டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் யாரும் மருந்துகளை எடுக்க வேண்டாம். எனது மகளை போன்று யாரையும் இழந்துவிடக்கூடாது’’ என அழுதபடியே அவர் கூறினார்.

உணவு, மருந்தாக உட்கொள்ளக்கூடாது: வெங்காரம் ஆங்கிலத்தில் போராக்ஸ் (Borax) எனப்படும் சோடியம் டெட்ராபோரேட் எனப்படும் கனிம உப்பு வகையை சேர்ந்தது. வெள்ளை நிறத்தில் கற்கண்டு வடிவத்தில் இருக்கும். துவர்ப்பு சுவை கொண்டது. இதை உணவாகவோ அல்லது மருந்தாகவோ கண்டிப்பாக உட்கொள்ளக்கூடாது. தங்கம் உள்ளிட்ட உலோகங்களை உருக்கும், வீட்டை தூய்மைப்படுத்தும் திரவத்தில் இருக்கும் ரசாயனமாகும். பூச்சிக்கொல்லி மருந்துகளிலும் பயன்படுத்தப்படும். இதை நாம் சாப்பிடும்போது, வாந்தி, வயிற்றுப்போக்கு, நீரிழப்பு ஏற்பட்டு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். சில நேரங்களில் உயிர் போகும் அபாயமும் உள்ளன. இதில் உடல் எடை குறைப்புக்கான எந்தவொரு தன்மையும் கிடையாது. உரிய ஊட்டச்சத்து சிகிச்சை நிபுணர்கள் ஆலோசனையின்றி, வலைத்தளங்களை பார்த்து எதையும் உட்கொள்ளக்கூடாது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : YouTube ,Madurai ,Velmurugan - Vijayalakshmi ,Kalaiyarasi ,Meenambalpuram, Sellur, Madurai ,
× RELATED நாடுகாணி கட்டளை கட்டுப்பாட்டு மையம்...