ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேறியது ஏன்?: கவர்னர் மாளிகை விளக்கம்

சென்னை: சட்டப்பேரவையில் மீண்டும் ஒருமுறை தேசிய கீதம் அவமதிப்பு செய்து அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டதால் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் தொடங்கப்படுவது மரபு. அதன்படி நேற்று இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் கவர்னர் உரையை படிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி, சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை படிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கூட்டம் தொடங்கியதும் கவர்னர் உரையை படிக்காமல், கடந்த 3 ஆண்டுகளாக செய்தது போன்று, தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டப்பேரவையில் காலம்காலமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு பேரவை கூட்டம் தொடங்கும். இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும் என்று விளக்கம் அளித்ததுடன், தயவுகூர்ந்து கவர்னர் உரையை படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

அவர் வெளியேறிய ஒரு சில நிமிடங்களில், சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? என்பது குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரையில் பல ஆதாரமற்ற மற்றும் வழி தவற வைக்கும் கூற்றுகள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் பல முக்கியமான பிரச்னைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெறுவதில் மாநிலங்களுக்குள் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு, இன்று ஆறாவது இடத்தைக் கூட தக்க வைத்துக்கொள்ள போராடுகிறது. மேலும், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான மிகக் கடுமையான பிரச்னை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த கவலைக்குரியது.

போதைப் பழக்கத்தினால் ஒரே ஆண்டில் 2,000க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் இளைஞர்கள், தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மாநிலத்தில் ஒரே ஆண்டில் 20,000 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது நாளுக்கு சுமார் 65 தற்கொலைகளாகும். இத்தகைய தீவிரமான பிரச்னையும் அரசின் உரையில் இடம் பெறவில்லை. இதுதவிர, 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. தற்காலிக ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடிக்கணக்கான மக்கள் அடித்தட்டு ஜனநாயகத்தில் பங்கேற்கும் அரசியலமைப்பு உரிமையில் இருந்து வஞ்சிக்கப்பட்டுள்ளனர். பண்டைய கோயில்களின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய முக்கிய உத்தரவுகள் ஐந்து ஆண்டுகளாகியும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதுமட்டுமின்றி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை கடும் அழுத்தத்தில் உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை பிற மாநிலங்களுக்கு மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மீண்டும் ஒருமுறை தேசிய கீதம் அவமதிக்கப்பட்டு, அதனை மதிக்க வேண்டிய அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories: