சென்னை: பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையைப் படிக்காமல் வெளிநடப்புச் செய்தார். இதை தொடர்ந்து, ஆளுநர் உரையின் ஆங்கில பதிப்பை ஆளுநர் படித்ததாக ஏற்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தது. அதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
2026ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டது. சிவப்பு கம்பள வரவேற்வுடன் வரவேற்கப்பட்டு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து வரும் 24ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். இன்று மறைந்த முன்னாள் சட்டசபை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். சட்டமன்ற உறுப்பினராக இருந்த பொன்சாமி மற்றும் முக்கிய பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். 22 மற்றும் 23ம் தேதிகளில் சட்டசபை கூட்டத்தொடர் முழுமையாக நடைபெறும். காலை கேள்வி பதிலுடன் தொடங்கி விவாதங்கள் நடைபெறும். 24ம் தேதி காலை கேள்வி பதில் முடிந்தவுடன் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலுரையுடன் நிறைவு பெறும்.
நாங்கள் எவ்வளவு தாழ்மையுடன் ஆளுநரை உரையை வாசியுங்கள் என்றதில் குற்றம் ஒன்றும் இல்லையே. சபையில் குறிக்கீடு எதனால் வந்தது. சபையில் உள்ள 234 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே பேச அனுமதி. ஆளுநருக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்ட கொடுத்துள்ள அதிகாரம், சட்டமும், முதல் நாள் அழைத்தால் சட்டமன்றத்திற்கு வந்து மாநில அரசு தயாரித்து ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்ட உரையை வாசிப்பது ஆளுநரின் கடமை.
சபையின் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் நாங்கள் நடந்தோம். ஒரு அரசை மக்கள் விமர்சனம் செய்யலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நிறை மற்றும் குறையை சொல்லலாம். ஒரு அரசின் நிறை, குறைகளை பற்றி பேசுவதற்கு ஆளுநருக்கு என்ன இருக்கிறது. ஆளுநருக்கு பேச வேண்டும் என்றால் ஆளுநர் மாளிகையிலிருந்து வெளி வந்து இயக்கங்களுடன் சேர்ந்து பேசலாம். ஆளுநர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை தாண்டி பேசுவது மரபு. அதை அனுமதிக்க முடியாது. ஒருவர் பேசும்போது, இன்னொருவர் குறுக்கிடக்கூடாது என்று மைக் ஆப் செய்யப்படும். அப்படி நான் பேசும்போது, ஆளுநரின் மைக் ஆப் செய்யப்பட்டிருக்கலாம். தாழ்மையுடன் என்றுதான் அவரிடம் உரையை வாசிக்கச் சொல்லிக் கேட்டேன்.
ஆனாலும், அவர் வாசிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தயார் செய்து தரும் உரையைத்தான் ஜனாதிபதி படிக்கிறார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையைப் படிக்காமல் இப்படி வெளியேற முடியுமா?. ஆளுநரிடமிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பு மட்டுமின்றி தமிழ்நாட்டின் மாண்பும் காப்பாற்றப்பட்டுள்ளது.தமிழ்நாடு சட்டமன்றத்தில் எப்போதும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும். இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். இந்த மரபு எப்போதுமே மாறாது.இவ்வாறு அவர் கூறினார்.
