49வது சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவு

சென்னை: கடந்த இரண்டு வாரமாக நடைபெற்று வரும் 49வது சென்னை புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் 49வது சென்னை புத்தகக் காட்சியை கடந்த 8ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த புத்தகக் காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இங்கு 1000 அரங்குகள் அமைக்கப்பட்டு அதில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், அரசியல் நூல்கள், சிறார் மற்றும் குழந்தைகள் இலக்கியம் என பல்வேறு வகைமைகளில் ஆயிரக் கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கடந்த இரண்டு வாரமாக நடைபெற்று வரும் இந்த புத்தகக் காட்சிக்கு தினமும் ஏராளமான வாசகர்கள் குடும்பத்துடன் வந்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் செல்கிறார்கள். இந்த ஆண்டு நுழைவுக் கட்டணம் இல்லாமல் அனைவருக்கும் இலவச அனுமதி வழங்கப்பட்டது வரவேற்பை பெற்றது. இன்று மாலை நடைபெறும் நிறைவு விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கலந்துகொள்கிறார். நிகழ்வில் பதிப்புத் துறையில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் பதிப்பாளர்களைக் கவுரவிக்கவுள்ளனர்.

சூரியன் பதிப்பக அரங்கு: சூரியன் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டு, அரங்கம் 13, 14ல் அரசியல் விழிப்புணர்வைக் கொடுக்கும் மாநில சுயாட்சி, திராவிட இயக்க வரலாறு, சிவந்த மண் தொடங்கி பல்வேறு அரசியல் நூல்கள் மற்றும் கதைகள், சித்த மருத்துவம், சினிமா, பயணக் கட்டுரைகள், ஆன்மிகம் என பல்வேறு வகைமைகளில் உள்ள ஏராளமான புத்தகங்கள் வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Stories: