சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று நடைபெற்ற ஆளுநர் உரை நிகழ்வு தொடர்பாக தமிழ்நாடு மக்கள் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இந்து சமய அறநிலையத் துறை தொடர்பாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கான இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கை: 8,488 திருக்கோயில்களில் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 31,163 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டதில் 13,340 திருக்கோயில்களுக்கு வரப்பெற்ற விண்ணப்பங்கள் தற்போது அந்தந்த மாவட்டக்குழுக்களின் பரிசீலனையில் உள்ளன. இதர 17,823 திருக்கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் தொடர்பாக எவ்வித விண்ணப்பமும் பெறப்படவில்லை. பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் காரணமாக 1,551 திருக்கோயில்களில் அறங்காவலர்களை நியமனம் செய்ய இயலவில்லை.
அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் மாவட்டக்குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. குறிப்பாக 27 வருவாய் மாவட்டங்களில் 2வது முறையாக மாவட்டக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அறங்காவலர்களுக்கு உதவியாக 3,290 திருக்கோயில்களில் மட்டும் சட்டப்பிரிவு 45(1)-ன் கீழ் செயல் அலுவலர்கள் நியமனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மற்ற திருக்கோயில்கள் அறங்காவலர்கள் அல்லது தக்கார் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. அனைத்து திருக்கோயில்களிலும் அறங்காவலர்களை நியமிக்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் விண்ணப்பங்கள் வராததே பல திருக்கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தாமதமாவதற்கு முக்கிய காரணமாகும்.
சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திட 14 உறுப்பினர்களைக் கொண்ட மாநில வல்லுநர் குழுவையும் மண்டல அளவில் மண்டல வல்லுநர் குழுக்களையும் அமைப்பதற்கும் 2022ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஆணைகளை பிறப்பித்துள்ளதோடு, வரைவு பாதுகாப்பு கையேட்டையும் வெளியிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டு, மாநில வல்லுநர் குழுவால் இதுவரை 14,804 திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் ரூ.571.55 கோடி மதிப்பீட்டில் 352 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு ரூ.425 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஆயிரம் ஆண்டுகள் பழமையான 76 திருக்கோயில்கள் உட்பட 3,956 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 100 முதல் 400 ஆண்டுகள் வரை குடமுழுக்கு காணாத பழமை வாய்ந்த திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தியும், பழுதடைந்து ஓடாமல் நின்றிருந்த திருத்தேர்களை மீண்டும் ஓடச் செய்தும், சிதிலமடைந்த திருக்குளங்களைச் சீரமைத்துத் தெப்ப உற்சவங்களை மீட்டெடுத்தும் சாதனை படைத்து வருகிறது திராவிட மாடல் அரசு.
தமிழ்நாடு அரசின் இத்தகைய ஆக்கப்பூர்வமான பணிகளை ஆதீனப் பெருமக்களும் சான்றோர்களும் பாராட்டி வருகின்றனர். தமிழ்நாடு அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் சீர்மிகு நடவடிக்கைகளால் முன்னெப்போதும் இல்லாத வகையில் திருக்கோயில்கள் புதுப்பொலிவு பெற்றுள்ளதோடு, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு சமய பெரியோர்கள், ஆன்றோர்கள், இறையன்பர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று, மனநிறைவை அளித்துள்ளது என்பதே நிதர்சனமாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
