திருப்பூர்: திருப்பூர் ரயில்வே கூட்ஷெட்டில் விரிவுபடுத்தப்பட்ட பிளாட்பாரம் பயன்பாட்டிற்கு வந்தது. தொழில் நகரான திருப்பூர் ரயில் நிலைய கூட்ஷெட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து கோதுமை, நெல், அரிசி, தானியங்கள், சோயா, கம்பு, புண்ணாக்கு, சிமெண்ட் உள்ளிட்டவை நாள்தோறும் குறைந்தபட்சம் 2500 டன் பொருட்கள் சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்படுகிறது. இதனை நேரடியாக லாரிகளில் இறக்கும் வகையில் ஏற்கனவே ரயில்வே கூட்ஷெட் செயல்பட்டு வந்தது.
ஆனால், அவை கட்டி பல ஆண்டுகள் ஆனதால் பழுதடைந்தும், ரயில் நிற்கும் இடத்தில் லாரி நிற்கும் இடத்திற்குமான உயரம் அதிகமாக இருந்ததால், அதனை உயர்த்த வேண்டும் என ரயில்வே கூட்ஷெட் தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனடிப்படையில் ரயில்வே கூட்ஷெட் குடோன் இடிக்கப்பட்டு லாரிகள் நிறுத்தி சரக்குகளை ஏற்றி இறக்கும் நடைமேடையும் அகலப்படுத்தி தரையை உயரப்படுத்தும் பணி நடந்து வந்தது.
இந்த பணிகள் காரணமாக சரக்கு ரயில்கள் வஞ்சிபாளையம் ரயில் நிலையத்திற்கு அனுப்பபட்டு அங்கு லாரிகளில் இறக்கி வந்த நிலையில், திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள கூட்ஷெட் பிளாட்பாரத்தை சபாபதிபுரம் வரையிலும் மறுபுறம் முதல் ரயில்வே நுழைவு வாயில் வரையிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு கான்கிரீட் சிமெண்ட் தரைத்தளம் அமைக்கும் பணி முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து மீண்டும் சரக்கு ரயில்கள் ஊத்துக்குளி சாலை ரயில்வே கூட்ஷெட்டில் நிறுத்தப்பட்டு சரக்குகள் கையாளப்படுகிறது. கான்கிரீட் தரைத்தளம் உயரமாகவும், ஊத்துக்குளி இணைப்பு மண் சாலையாக இருந்தது. அதை தார் சாலையாகவும் மாற்றப்பட்டுள்ளதால் போக்குவரத்து எளிதாக்கப்பட்டுள்ளது.
