ஸ்ரீவில்லி. அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் கணக்கெடுப்பிற்கு கேமரா பொருத்தும் பணி தீவிரம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் கணக்கெடுப்பிற்கு கேமரா பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை மேகமலை புலிகள் காப்பகத்தில் ஒவ்வொரு ஆண்டும் புலிகளை கணக்கெடுக்க கேமராக்கள் பொருத்துவது வழக்கம்.

இதன்படி, நேற்று மேற்கு தொடர்ச்சி மலையில் கேமராக்கள் பொருத்தும் பணி துவங்கியது. வனத்துறையினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் 2வது நாளாக இன்று இப்பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘புலிகள் கணக்கெடுப்பிற்காக 350 முதல் 400 கேமராக்கள் வரை பொருத்தப்பட உள்ளது.

இந்த கேமராக்கள் வனப்பகுதியில் சுமார் 45 நாட்கள் வரை இருக்கும். இந்த கேமராக்கள் சரியாக செயல்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்படும்’ என்றார். ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன் உத்தரவின் பேரில் வனத்துறையினர் செய்துள்ளனர்.

* கொடைக்கானலில் துவக்கம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனஉயிரின வனச்சரகத்திற்குட்பட்ட கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், தேவதானப்பட்டி, பெரும்பள்ளம் உள்ளிட்ட 7 வனச்சரகங்களில் அகில இந்திய அளவில் புலிகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. இப்பணி 6 நாள் நடைபெறுகிறது. காலை முதல் மாலை வரை நடைபெறவுள்ள இப்பணியில் நேர்க்கோட்டு பாதை கணக்கெடுப்பு மூலம் ஊண் உண்ணிகளான புலி, சிறுத்தை, செந்நாய் எண்ணிக்கைகள் கணக்கெடுக்கப்பட உள்ளன.

இதற்காக 200க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. புலிகள் மட்டுமின்றி பார்க்கின்ற அனைத்து விலங்குகளின் கால் தடம், எச்சங்கள் மற்றும் கேமரா பதிவுகள் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் ஆனைமலை புலிகள் காப்பக வன உயிரியலாளர் மூலம் பயிற்சி பெற்ற 100க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: