×

பொங்கல் விழாவை முன்னிட்டு கீழப்பனையூரில் வடமாடு மஞ்சுவிரட்டு

திருமயம், ஜன.20: அரிமளம் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 7 பேர் லேசான காயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள கீழப்பனையூர் தெற்கு குடியிருப்பில் புனித அந்தோணியார் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15 காளைகள் பங்கேற்றன. மஞ்சுவிரட்டை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஒவ்வொரு காளையையும் அடக்க 9 வீரர்கள் கொண்ட குழுவினர் களமிறங்கினர். ஒரு காளையை அடக்க 20 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 9 பேர் கொண்ட குழுவைச் சேர்ந்த வீரர்கள் காளையை அடக்க முடியவில்லை என்றால் காளை போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதேசமயம் குறிப்பிட்ட நேரத்திற்குள் காளையை வீரர்கள் அடக்கி விட்டால் மாடுபிடி வீரர்கள் வெற்றிபெற்றதாக வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.இதில் 12 காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசை வென்றனர். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் குழுவினருக்கு தலா ரூ.5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.இதனிடைய காளைகளும் உரிய மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாடுகளை அடக்க முயன்றபோது 7 மாடுபிடி வீரர்கள் லேசான காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மாடுபிடி வீரர்களுக்கு மஞ்சுவிரட்டு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டை காண சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். அரிமளம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Cow chase ,Keelappanaiyur ,Pongal festival ,Thirumayam ,Arimalam ,St. ,Anthony’s Temple ,Keelappanaiyur South ,Pudukkottai district ,Pongal festival… ,
× RELATED விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் புதிய தலைவர்கள் நியமனம்