சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல்கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக அவர் ஏதாவது ஒரு காரணத்தை ெசால்லி அந்த உரையை முழுவதுமாக படிக்காமல் புறக்கணித்து வருவதால் இன்று நடைபெறும் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை முறையாக படிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு கூட இருக்கிறது. இதில், பங்கேற்று உரையாற்றுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு லோக் பவனில் இருந்து காரில் புறப்படுகிறார். காலை 9.25 மணிக்கு தலைமைச்செயலகம் வரும் அவருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும்.
தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் மு.அப்பாவு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று சட்டப்பேரவை வளாகத்துக்கு அழைத்து வருவார். தமிழக சட்டப்பேரவை கூட்ட அரங்கத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வந்ததும் சபாநாயகரின் இருக்கைக்கு செல்வார்.
சரியாக, காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதை தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த தொடங்குவார். அவரது உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள், கொள்கை, சாதனைகள் இடம்பெற்றிருக்கும். கூட்ட முடிவில் தேசியக்கீதம் இசைக்கப்படும். ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடித்ததும், அந்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிப்பது மரபாகும். அத்துடன் அன்றைய கூட்டம் நிறைவடையும். தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். அநேகமாக, வரும் 23ம் தேதி (வெள்ளி) வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் தனது உரையை முறையாக நிகழ்த்துவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். அவர் 2022ம் ஆண்டு முதன்முதலில் தமிழக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார்.
அந்த உரையை மட்டும் தான் அவர் முழுமையாக வாசித்தார். அதன்பிறகு தனது உரையை அவர் முழுமையாக வாசிக்கவில்லை. 2023ம் ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர், திராவிடம் ஆகிய வார்த்தைகளை அவர் படிக்கவில்லை. ஆனால், தமிழக அரசு உரையில் அந்த வார்த்தைகள் இடம்பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார். அதேபோன்று 2024ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில், ஆரம்பத்திலேயே தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, கவர்னர் உரையை வாசிக்காமல் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆனால், தமிழில் அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசிக்க, அது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது.
கடந்த ஆண்டு (2025) ஜனவரி 6ம் தேதி கூடிய தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்திலும் தேசிய கீதம் பாடப்படாததை சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இப்படி உரையை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஆர்.என்.ரவி, இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையை முறையாக வாசிப்பாரா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இதுபற்றிய விவரம் இன்று காலை சட்டப்பேரவை கூடியபிறகுதான் தெரியவரும். மேலும், தமிழக சட்டப்பேரவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் இன்றைய கவர்னர் உரையில் தமிழக மக்களுக்கான சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
