×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் 4.85 ஏக்கர் நிலம் அபகரிப்பு: நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் மீட்பு

 

சென்னை: ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கம் அவலூர் காலனியை சேர்ந்தவர் கங்கன். இவர் கடந்த மார்ச் 26ம் தேதி காவல் துறை வடக்கு மண்டல ஐஜி அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், பெரும்புலிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன்கள் ஜெயராமன், வேலு ஆகியோர் மீது நில அபகரிப்பு புகார் ஒன்றை காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளேன். இது தொடர்பாக விசாரணையும் நடைபெறவில்லை.
என்னை போல் சென்னையை சேர்ந்த தணிகாசலம் என்பவரும் வேலு மற்றும் சக்திவேல் மீது அளித்த உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதேபோல் பழனி என்பவரையும் ஏமாற்றியுள்ளனர். இவர்களால் ஏமாற்றப்பட்ட 2 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அதில் ஒருவர் ராஜூ, அவரது மனைவி விமலா மகள் சந்தியா காஞ்சிபுரம் மாவட்டம் அவலூர் காவல் நிலையத்தில் ஜெயராமன் மற்றும் வேலு மீது புகார் அளித்துள்ளார். அவர்கள் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், இருவரும் வங்கியில் போலி ஆவணங்கள் கொடுத்து ஏமாற்றியுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் வேலையை இழந்துள்ளார். எனவே தொடர்ந்து அப்பாவி மக்கள் மற்றும் விவசாயிகளை ஏமாற்றி நிலத்தை அபகரித்து வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் மீது விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ராணிப்பேட்டை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். அதன்படி அவலூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஜெயராமன் மற்றும் வேலு ஆகியோர் இணைந்து விவசாயிகளை ஏமாற்றி அவர்களின் நிலங்களை அபகரித்து வந்தது தெரியவந்தது.

மேலும், இதுபோல் கங்கன் நிலம் மற்றும் சென்னையை சேர்ந்த தணிகாசலம், விமலா உள்பட 10 ஆண்டுகளில் பலரிடம் மோசடியாக நிலங்களை அபகரித்து வந்தது விசாரணையில் உறுதியானது. அதை தொடர்ந்து போலீசார் வேலு, மற்றும் ஜெயராமன் மீது ஐபிசி 420, 468, 471 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலுவை கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் வேலு என்பவர் போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் 4 ஏக்கர் 85 சென்ட் நிலத்தை அபகரித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் சொத்துகளை பறிமுதல் செய்தனர்.

 

Tags : Ranipet ,Chennai ,Kangan ,Avalur Colony, Perumpulipakkam, Ranipet ,North Zone IG ,Police Department ,Arumugam ,Jayaraman ,Velu… ,
× RELATED மணலூர்பேட்டை சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு