சென்னை: பாமகவுக்கு உரிமை கோரியும் கட்சியின் கொடி, சின்னம், பெயரை பன்படுத்த தடை கோரியும் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாமகவுக்கு யார் தலைவர் என்று ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டி தான்தான் கட்சியின் தலைவர் என்று தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. இதற்கிடையில், கட்சியின் தலைவர் நான்தான், அன்புமணியின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. எனவே, கட்சியின் தலைவராக தான் தொடர்வதாகவும் அதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் எனக் கோரியும் ராமதாஸ் இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். ஆனால், தேர்தல் ஆணையம் அன்புமணிதான் பாமக தலைவர் என்று அறிவித்தது.
இதையடுத்து, தன்னை கட்சியின் தலைவராக அறிவிக்கவும், கட்சியின் சின்னம், பெயர், கொடியை பயன்படுத்த தடை கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், பாமக தலைவர் அன்புமணி என்று சொல்வதற்கு தேர்தல் ஆணையத்திற்கு சட்ட அதிகாரம் இல்லை. தேவை ஏற்பட்டால் மனுதாரர் சம்பந்தப்பட்ட சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில் பாமகவுக்கு நான் தான் தலைவர் என சொந்தம் கொண்டாடி பாமக நிறுவனரான ராமதாஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் கே.அருள், வி.எஸ்.கோபு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 வழக்குகளை தொடர்ந்துள்ளனர். அந்த மனுக்களில், ‘பாமக தலைவர்’ எனக் குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் அனுப்பிய இரு கடிதங்களும் சென்னை தி.நகரில் அன்புமணி ஏற்கனவே வசித்த திலக் தெருவுக்கு தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த முகவரிதான் பாமகவின் அலுவலக முகவரி என தேர்தல் ஆணையத்தில் அன்புமணி முறைகேடாக பதிவு செய்து வைத்துள்ளார்.
உண்மையில் பாமகவின் தலைமை அலுவலகம் தேனாம்பேட்டையில் உள்ள நாட்டு முத்து நாயக்கன் தெருவில் தான் ஆரம்பகாலகட்டத்தில் இருந்து இயங்கி வருகிறது. தற்சமயம் திண்டிவனம் தைலாபுரத்திலும் கூடுதல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. எனவே திலக் தெருவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தை திரும்பப்பெற்று, பாமகவின் தலைவர் ராமதாஸ் தான் என்று அங்கீகரித்து, அந்த கடிதங்களை எங்களது முகவரிக்கு அனுப்பி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல அன்புமணிக்கு மாம்பழ சின்னம் வழங்கியும், பாமகவின் தலைவர் என பதவியை நீட்டித்தும் வழங்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்தின் கடிதங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார். இதேபோல பாமக பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் முரளி சங்கர் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், பாமகவின் பெயரையோ, கட்சி கொடியையோ அல்லது மாம்பழ சின்னத்தையோ அன்புமணியோ அல்லது வேறு யாருமோ பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த 3 மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
