சென்னை: அண்ணா அன்றைக்கு பற்ற வைத்த அறிவுத் தீ இன்று வரை கொழுந்துவிட்டு எரிகிறது என்றால் மிகை ஆகாது. அதனால் தான் தீ பரவட்டும் என்று சொன்னால் இன்றைக்கு கூட சில பேர் பயந்து நடுங்குகின்றார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சென்னை, நந்தனம் ஒம்.எம்.சி.ஏ மைதானத்தில் 49வது சென்னை புத்தகக் காட்சியில் நடந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்துகொண்டு, சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் கணபதி விருதை ஐந்திணை பதிப்பகத்தின் கதிரேசன், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் மெய்யப்பன் விருது சிவகுரு பதிப்பகத்திற்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தை கவிஞர் வள்ளியப்பா விருது எழுத்தாளர் முருகேஷ்க்கும், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது கடற்கரய் மத்தவிலாச அங்கதம், சிறந்த எழுத்தாளருக்கான பெண் பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது தீபாக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை முத்து விருது லோகமா தேவிக்கும், முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தூர் மோகனரங்கன் கவிதை இலக்கிய விருது சிவராசன், சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான சிந்தனைக் கவிஞர் கவிதாசன் விருதை சுந்தர ஆவுடையப்பனுக்கும் வழங்கினார்.
விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முன்பு எல்லாம் சென்னையில் விடுமுறை என்றால் எல்லோரும் பீச், மால், சினிமா தியேட்டர் என்று அங்கு மட்டும்தான் கூட்டங்கள் கூடும். ஆனால், இன்றைக்கு இந்த புத்தகக் காட்சி தொடங்கி விட்டால், மக்கள் கூட்டம், அதுவும் குடும்பம், குடும்பமாக இந்த புத்தகக் காட்சியை நோக்கி வருகின்றார்கள். இதை எல்லாம் பார்க்கும் போது, இன்றைக்கு சென்னை இந்தியாவினுடைய ஒரு பதிப்பகத் தலைநகராக உயர்ந்து நிற்கின்றது. திராவிட இயக்கத்தை எடுத்துக் கொண்டால், பேசியும், படித்தும், எழுதியும் வளர்ந்த இயக்கம் திராவிட இயக்கம். பெரியார், அண்ணா, கலைஞர் என்று தலைவர்கள் மட்டுமல்லாமல் அந்த இயக்கத்தினுடைய தொண்டர்கள் வரைக்கும் இதழ்களை நடத்தியிருக்கிறார்கள். புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் 100க்கும் அதிகமான பத்திரிகைகளை நடத்தியது தான் திராவிட இயக்கம்.
எழுத்தை வெறும் பிரசார கருவியாக பயன்படுத்தாமல், மக்களுக்கான ஒரு பகுத்தறிவை முற்போக்கு சிந்தனையைக் கொண்டு சென்று சேர்க்கின்ற சேவையாக திராவிட இயக்கத்தலைவர்கள் செயல்பட்டு வந்தார்கள்.
பெரியார் உலகினுடைய போக்கை மாற்றிய கம்யூனிஸ்ட் அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து கொண்டு வந்தார். அண்ணா உலக வரலாற்று வீரர்களுடைய, தலைவர்களுடைய கருத்துகளை எல்லாம் தன்னுடைய தம்பிகளுக்கு கடிதமாக எழுதினார். அண்ணா அன்றைக்கு பற்ற வைத்த, அந்த அறிவுத்தீ இன்று வரை கொழுந்துவிட்டு எரிகிறது என்றால் மிகை ஆகாது. அதனால் தான் தீ பரவட்டும் என்று சொன்னால் இன்றைக்கு கூட சில பேர் பயந்து நடுங்குகின்றார்கள். அதுமாதிரி, கலைஞர் எழுதிய நாடகங்களும், இலக்கியங்களும், புத்தகங்களும் தமிழ்நாட்டுக்கென்று ஒரு தனி அரசியல் பாதையை உருவாக்கியது.இவ்வாறு அவர் பேசினார்.
