×

பேருசார் குழந்தைகள் நலத்திட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் ரூ.7,376 ஆக உயர்வு

 

சென்னை: பேருசார் குழந்தைகள் நலத்திட்ட தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.1,500லிருந்து ரூ.7,376 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக கூட்டரங்கில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பேறுசார் குழந்தைகள் நலத் திட்ட பகுதி நேர தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் ரூ.1,500 லிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.7,376 ஆக உயர்த்தி அதற்கான ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் பிரசவ சேவைகள் வழங்க பேறுசார் குழந்தைகள் நலத் திட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தேசிய ஊரக நலத்திட்டத்தின்கீழ், நோயாளர் நலச்சங்கம் மூலம் பிரசவ நேரங்களில் அறையை தூய்மையாக வைத்துக் கொள்ள செவிலியர்களுக்கு உதவியாக இவர்கள் இருந்து வருகின்றனர். கொரோனா காலத்தில் பணியாற்றிய பேருசார் குழந்தைகள் நலத்திட்ட தூய்மை பணியாளர்கள் 938 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கத்தின் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டார்கள். அவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஊதியம் என்கின்ற வகையில் ஏறக்குறைய ரூ.27,000 வரை பெற்று வருகிறார்கள். அதில், மீதமிருக்கும் 1,575 பேருக்கு இந்த ஊதியம் உயர்த்தி வழங்கும் ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : Chennai ,Minister ,M. Subramanian ,Perusar ,Chennai, Tamil Nadu ,MGR Medical University ,
× RELATED மணலூர்பேட்டை சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு