சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை: குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் வரவேற்பு விழாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளருக்கு அழைப்பு அனுப்பியுள்ளார். கடந்த சில வருடங்களாகவே ஆளுநர்களின் அடாவடிப் போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநர் நடத்தும் குடியரசு தின வரவேற்பு நிகழ்வை புறக்கணித்தே வருகிறது. அதற்கான காரணங்கள் எதுவும் மாறாமல் இருக்கும் நிலையில் ஆளுநரின் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியை புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறது. ராஜ் பவனை ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசனையின் பேரில்தான் ‘மக்கள் மாளிகை’ என்று பெயர் மாற்றம் செய்ததாக பிரதமர் மோடியே அறிவித்திருந்தார்.
ஆனால், ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தி மொழியிலேயே அமைந்திருக்கிறது. இதேபோன்று, ஒன்றிய அரசாங்கம் தமிழ்நாட்டிற்கு ‘சமக்ர சிக் ஷா அபியான்’ நிதியை இன்றுவரை நிறுத்தியே வைத்திருக்கிறது மற்றும் பல்வேறு வகைகளில் மாநில உரிமைகளுக்கு எதிராகவே நின்றிருக்கிறது. ஒன்றிய அரசின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காகவே அவதாரம் எடுத்தது போல, ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதை தொடர்ந்து கொண்டிருக்கிறார். எனவே, இந்த ஆண்டும் ஆளுநர் குடியரசு தின வரவேற்பு விழாவிற்கு அழைத்துள்ளபோதும், அதை புறக்கணிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்திருக்கிறது.
