சென்னை: தேர்தல் வரும்போது மோடி ஒருபுறம், அமித்ஷா மறுபுறம் என ஒட்டுமொத்த கேபினட்டும் தமிழகத்திற்கு படையெடுக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.திரு.வி.க. நகர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் சந்திரயோகி சமாதி சாலையில் சிஎம்டிஏ சார்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்தின் இறுதி கட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, புரசைவாக்கம் கான்ரான்ஸ்மித் சாலையில் சலவை கூடம், புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கர் சாலை கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம், சிஎம்டிஏ சார்பில் மேம்படுத்தப்பட்டு வரும் பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, துறைமுகம் சட்டப்பேரவை தொகுதியில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அரசு ஸ்டான்லி மரு த்துவமனை அருகே கட்டப்பட்டு வரும் 776 அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், நிருபர்களிடம் சேகர்பாபு கூறியதாவது: மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு மண்டபங்களை கட்டி வருகிறோம்.
அந்த வகையில் திரு.வி.நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டபத்திற்கு அண்ணல் அம்பேத்கர் திருமண மாளிகை என முதலமைச்சர் பெயர் சூட்டியுள்ளார். ஒருநாள் மண்டபம் வாடகை ரூ.75,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்வர் 29ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையை ஒட்டி தான் எடப்பாடி தேர்தல் அறிவிப்பை அறிவித்துள்ளார். மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் தான் பொருளாதாரத்தை ஆராய்ந்து வாக்குறுதிகளை அறிவிப்பார்கள். தேர்தலில் வெற்றி பெறாதவர்கள் எதை வேண்டுமானாலும் அறிவிக்கலாம்.
அதை பற்றி கவலைப்படவில்லை. எங்கள் பணி மக்கள் பணி. திமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். எடப்பாடி அறிவிப்புக்கு நாங்களும் கவலைப்படவில்லை, மக்களும் கவலைப்படவில்லை.
ஆளுநரின் கொள்கைகள், கோட்பாடுகள், சித்தாந்தங்கள் தமிழகத்தில் எடுபடாமல் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழகம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் பிரதமர் தமிழகம் வருவது அடிக்கடி எதிர்பார்க்கலாம். மோடி ஒருபுறம் அமித்ஷா மறுபுறம் என ஒட்டுமொத்த கேபினட்டும் தமிழகத்திற்கு படையெடுக்கும். எத்தனை படையெடுப்புகள் வந்தாலும் இரும்பு மனிதராக நின்று முதலமைச்சர் மீண்டும் முதல்வராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், எம்எல்ஏ தாயகம் கவி, மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
