பள்ளி வளாகங்களில் 1000 காய்கறி கீரை தோட்டம் அமைப்பு கலெக்டர் துவக்கி வைத்தார்

ராமநாதபுரம், ஜன.28:  ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், புத்தேந்தல் கிராமத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பாக மாவட்டத்தில் பள்ளி வளாகங்களில் 1000 காய்கறி-கீரை தோட்டம்’ அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை பரப்புகளை அதிகரித்திடும் நோக்கில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக 429 ஊராட்சிகளில் ‘1000 குறுங்காடுகள்” வளர்க்கும் திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தற்போது மாவட்டத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் காய்கறி மற்றும் கீரை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் 1000 கிச்சன் கார்டன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்தோட்டத்தில் காய்கறி, கீரை வகைகள், முருங்கை, பப்பாளி, கருவேப்பிலை போன்ற பயன்தரும் செடிகள், மரங்கள் நடவு செய்து பராமரிக்கப்பட உள்ளன. அதன்படி, புத்தேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காய்கறி-கீரை தோட்டம்’ அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். மேலும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த கீரை, காய்கறிகள் வழங்குவதன் மூலம் வளர் இளம் பெண் குழந்தைகளுக்கு ரத்தசோகை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும் எனவும், நெடுங்கால பயனாக மகப்பேறு கால இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு, தாய் சேய் நலம் உறுதி செய்திட வாய்ப்பாக அமையும் என கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரதீப் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ரகுவீர கணபதி,வீரப்பன் உட்பட பல அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: