சேலம்: சேலம்-சென்னை இடையே விரைவில் கூடுதல் விமானம் இயக்க அல்ஹிண்ட் ஏர் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசின் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், விரைவில் சென்னைக்கு கூடுதல் விமான சேவை அமலுக்கு வரவுள்ளது. சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து உதான் திட்டத்தின் கீழ் பெங்களூரு, ஐதராபாத், கொச்சி ஆகிய 3 நகரங்களுக்கு இண்டிகோ, அலையன்ஸ் ஏர் நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன. இதுபோக உதான் திட்டமில்லாமல் சேலம்-சென்னை இடையே தினசரி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் வழங்கி வருகிறது. இப்படி 4 முக்கிய நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுவதால், தினமும் குறைந்தது 300 பயணிகள் வந்துசெல்கின்றனர்.
இதுபோக சேலம் விமான நிலையத்தில் விமானிகள் பயிற்சி பள்ளியும் இயங்கி வருவதால், சிறிய ரக விமானங்களில் மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சேலம் விமான நிலைய விரிவாக்க பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சூழலில் தற்போது சேலம்-சென்னை இண்டிகோ விமானம், மாலை 3.20 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது. மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து சேலத்திற்கு மாலை 5.30 மணிக்கு விமானம் வந்து சேர்கிறது. இந்நிலையில் சேலம்-சென்னை இடையே காலை நேரத்தில் விமான சேவை வழங்க கேரளாவை தலைமையிடமாக கொண்ட அல்ஹிண்ட் ஏர் நிறுவனம், ஒன்றிய அரசின் சிவில் விமான போக்குவரத்துத்துறையை நாடியது.
இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம்-சென்னை இடையே தற்போது இண்டிகோ நிறுவனம் ஒரு விமானத்தை இயக்கி வருகிறது. தற்போது அல்ஹிண்ட் ஏர் நிறுவனம் மேலும் ஒரு விமானத்தை சேலம்-சென்னை இடையே இயக்க அனுமதி பெற்றிருக்கிறது. இந்த புதிய விமான சேவை விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. சேலம் மட்டுமின்றி சுற்றியுள்ள நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்ட தொழிலதிபர்கள், வியாபாரிகள், மாணவர்கள் பயன்பாட்டிற்கு இந்த விமானம் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறோம்,’’ என்றனர்.
