துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸ் அணி கார் தீப்பிடித்து எரிந்தது

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘குட்​ பேட் அக்​லி’ என்ற படத்தில் நடித்த அஜித்குமார், மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்குகிறது. இந்நிலையில், துபாயில் நடந்து வரும் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி 24ஹெச் கார் ரேஸில் அஜித்குமார் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அவரை இசை அமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார், அனிருத், நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் சிபிராஜ் ஆகியோர் துபாயில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், அஜித்குமாரின் கார் ரேஸ் அணியின் கார், போட்டியின் போது திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அந்த காரை ஓட்டிய அயர்டன் ரெடான்ட் என்ற வீரர் தீப்பிடித்ததை அறிந்து, உடனே காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி ஓடினார். பிறகு தீயணைப்பு உபகரணங்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதற்கு முன்பு அஜித்குமார் அணியின் கார்கள் அடிக்கடி விபத்துகளை சந்தித்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு, தான் நடிக்கும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டேன் என்றும், விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்றும் அஜித்குமார் சொல்லியிருந்தார்.

தற்போது அவரது கார் ரேஸ் அணியின் ஸ்பான்சர் நிறுவனம் ஒன்றின் விளம்பர படத்தில் நடித்திருப்பது, பல்வேறு தரப்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அஜித்குமாரின் பழைய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர், ‘நான் ஸ்பான்சர்களை தேடுவது எனது தனிப்பட்ட வருமானத்துக்காக அல்ல. ரேஸிங் என்ற ஆற்றல் மிகுந்த விளையாட்டில் முதலீடு செய்வதற்குத்தான். ரேஸ் ஓட்டுநர்கள், பிராண்டுகள், கார் உற்பத்தி நிறுவனங்கள் என்று பலருக்கு இதனால் நன்மை கிடைக்கும். அதனால்தான் ஸ்பான்சர்களின் கதவை நான் தட்டி வருகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: