சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்த நிலையில், வாடகை வாகனங்கள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தென் மாவட்ட மக்கள், விமானங்களில் பயணிக்க நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது, சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட நகர்களுக்கு செல்லும், அனைத்து விமானங்களிலும் டிக்கெட்டுகள் இல்லாததால், பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
டிக்கெட் இல்லாததால் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் டிக்கெட்டி முன்பதிவு செய்ய முயன்றனர். ஆனால், சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு, வழக்கமான விமான கட்டணம் ரூ.3,889லிருந்து ரூ.9,797ஆக உயர்ந்தது. அதுவும் ஒரு சில டிக்கெட்டுகள் மட்டுமே இருந்தன. அதன் பின்பு பயணிகள் பெங்களூர் வழியாக இணைப்பு விமானத்தில், திருவனந்தபுரம் செல்வதற்கு, ரூ.15,218 கட்டணம் வசூலிக்கப்பட்டது. சென்னையில் இருந்து கோவை செல்லும் அனைத்து விமானங்களிலும் டிக்கெட் விற்றுத்தீர்ந்தது. இதனால் இணைப்பு விமானங்களில் கோவைக்கு செல்ல வேண்டும் என்றால்,ரூ.3,499 பயண டிக்கெட்டிற்கு, ரூ.16,500 கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, தென் மாவட்ட பயணிகள் விமான பயணத்தை தவிர்த்துவிட்டு வாடகை கார், வேன்களில் பயணம் மேற்கொண்டனர். இதற்குக் காரணம் விமான நிறுவனங்கள். தமிழ்நாட்டிற்குள் இயக்கும் விமானங்களை பெருமளவு குறைத்து விட்டன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை, மதுரைக்கு சென்னையிலிருந்து, தினமும் வருகை புறப்பாடு 16 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது ஏடிஆர் சிறிய ரக விமானங்களுக்கு பதிலாக, பெரிய விமானங்களை இயக்குவதாக கூறி, அந்த விமானங்கள் எண்ணிக்கையை, வருகை புறப்பாடு 6 ஆக குறைந்து விட்டது. அதைப்போல் திருச்சிக்கு வருகை புறப்பாடு, 8 விமானங்களாக இருந்தது, தற்போது நான்காக குறைந்து விட்டது.
மேலும் தூத்துக்குடி, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்டு வந்த விமானங்களை, சில விமான நிறுவனங்கள், எந்தவித காரணங்களும் கூறாமல் நிறுத்தி விட்டன.
பண்டிகை மற்றும் கோடை விடுமுறை போன்ற நாட்களில், கூடுதல் ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படுவது போல், விமானங்களின் எண்ணிக்கையும், விசேஷ காலங்களில், பயணிகளின் கூட்டங்களுக்கு தகுந்தாற் போல், அதிகரித்து கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.
