×

தட்சிண்சித்ரா, முட்டுக்காடு வழியாக மாமல்லபுரம் வரை டபுள் டக்கர் பேருந்து நீட்டிக்க திட்டம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தகவல்

 

சென்னை: தட்சிண சித்ரா – முட்டுக்காடு வழியாக டபுள் டக்கர் பேருந்து மாமல்லபுரம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அயலக தமிழர் தினத்தை முன்னிட்டு, பாரம்பரிய கலாச்சார சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அமெரிக்க வாழ் தமிழர்கள் மற்றும் அசோக் லேலண்ட் லிமிடெட் நிறுவனம் இணைந்து ரூ. 1.89 கோடி மதிப்பீட்டில் ஒரு இரட்டைத் தள மின்சார பேருந்தினை கடந்த 12ம் தேதி ஹிந்துஜா அறக்கட்டளை, மும்பை மூலமாக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினர்.

இப்பேருந்து மூலம் இயக்கப்படும் சுற்றுலா சேவைகள் சென்னை நகரின் வரலாற்று கலாச்சார மற்றும் கட்டிடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடும் வகையில் இச்சுற்றுலா அமையும். இத்திட்டம் குறிப்பாக பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வரலாற்று தகவல் சார்ந்த மற்றும் அனுபவமிக்க சுற்றுலா அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கெல்லீஸ் மற்றும் கொசப்பேட்டை அரசு காப்பகங்களில் உள்ள பெண் குழந்தைகள் மற்றும் ராயபுரம் அரசு காப்பகத்தில் உள்ள ஆண் குழந்தைகள் என மொத்தம் 54 மாணவ மாணவிகளுடன் முதல் பாரம்பரிய கலாச்சார பண்பாடு சுற்றுலா நடைபெற்றது. மேலும் பொங்கல் விடுமுறை தினங்களை முன்னிட்டு நாளை முதல் வரும் 18ம் தேதி வரை மாலை நேரத்தில் சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 50வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை பார்வையிட வரும் பள்ளி மாணவ மாணவியர்களை சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பேருந்து இயக்கப்பட உள்ள முதல் வழித்தடம் – 1 இரட்டைத் தள மின்சார பேருந்து – பாரம்பரிய கலாச்சார சுற்றுலா வழித்தட விவரங்கள் : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தலைமையகம் (தொடக்கம்) – எல்.ஐ.சி – ஸ்பென்சர் பிளாசா – மக்கா மஸ்ஜித் – பல்லவன் சாலை – பாடிகாட் முனீஸ்வரர் கோவில் – ராஜா அண்ணாமலை மன்றம் – சென்னை உயர்நீதிமன்றம் – தலைமைச் செயலகம் – ரிசர்வ் வங்கி – சென்னை துறைமுகம் – வெற்றி போர்ச் நினைவுச்சின்னம் – நேப்பியர் பாலம் – அண்ணா ; கலைஞர் நினைவிடம் – எம்.ஜி.ஆர் ; ஜெயலலிதா நினைவிடம் – மெரினா கடற்கரை – கலங்கரை விளக்கம் – பட்டினப்பாக்கம் கடற்கரை – சாந்தோம் தேவாலயம் – அகில இந்திய வானொலி – காவல்துறை தலைமை அலுவலகம் – குயின் மேரீஸ் கல்லூரி – விவேகானந்தா ஹவுஸ் – பிரெசிடென்சி கல்லூரி – எழிலகம் – சென்னை பல்கலைக்கழகம் – தூர்தர்ஷன் கேந்திரா – ராஜாஜி மண்டபம் – ஓமந்தூரார் அரசு மருத்துவமனை – தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தலைமையகம் (முடிவு) இவ்வாறு வழித்தடம் – 1 வகுக்கப்பட்டுள்ளன.

மேலும், வழித்தடம் – 2 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திலிருந்து தட்சிண சித்ரா, முட்டுக்காடு வழியாக மாமல்லபுரம் சென்றுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Mamallapuram ,Dakshina Chitra ,Muttukadu ,Tamil Nadu Tourism Development Corporation ,Chennai ,Ayalakka Tamil Day ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED ‘டால்பின்’ அன்புமணிக்கு விவசாயிகளின்...