×

சென்னை சங்கமம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

 

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவை’ ேநற்று மாலை பறை இசை அடித்து தொடங்கி வைத்தார். இதையடுத்து இன்று முதல் 18ம் தேதி வரை சென்னையில் மக்கள் கூடும் 20 இடங்களில் பொங்கல் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலைவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை 6 மணியளவில் ஒரு நாட்டுப்புற பெண் கலைஞரிடம் இருந்த பறை இசை கருவியை வாங்கி, அதை அடித்து தொடங்கி வைத்தார். இதையடுத்து கலைஞர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதை முதல்வர் ரசித்து பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து, இன்று (15ம் தேதி) முதல் 18ம் தேதி வரையில் (மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை) சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் 20 இடங்களில் 40 வகையான கலைகளுடன் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சென்னை சங்கமத்தில் முதன்முறையாக ‘கோ-ஆப்டெக்ஸ்’ மற்றும் கலை பண்பாட்டுத்துறை இணைந்து நடத்தும் அலங்கார ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி காணும் பொங்கலான 17ம் தேதி (சனிக்கிழமை) சென்னை அருங்காட்சியகத்தின் வளாகத்தில் தேசிய கலைக்கூடம் முன்புறம் மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.

சென்னையில் கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், செம்மொழி பூங்கா, ராயபுரம் ராபின்சன் விளையாட்டு மைதானம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இசைக்கல்லூரி, எழும்பூர் அருங்காட்சியகம், வள்ளுவர்கோட்டம், மெரினா கடற்கரை, தியாகராயநகர் நடேசன் பூங்கா எதிரே உள்ள மைதானம், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, கிண்டி கத்திபாரா பூங்கா, ஆவடி படைத்துறை உடை தொழிற்சாலை வளாகம், தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி உள்ளிட்ட 20 இடங்களில் நிகழ்ச்சிகள் 15.1.2026 முதல் 18.1.2026 வரை நான்கு நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளன. இதை பொதுமக்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்.

1500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற வடிவங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழா நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி, அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் உயர் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chennai Sangamam ,Chief Minister ,Chennai ,M.K. Stalin ,Chennai Sangamam – Namma Uru Festival ,
× RELATED ‘டால்பின்’ அன்புமணிக்கு விவசாயிகளின்...