இந்திய பொருட்கள் மீது 500 சதவீத வரி விதிக்கும் அமெரிக்க அரசை கண்டித்து வரும் 22ல் 10 தொழில் நகரங்களில் ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள் கூட்டாக அறிவிப்பு

 

சென்னை: இந்திய பொருட்கள் மீது 500 சதவீத வரி விதிக்கும் அமெரிக்க அரசை கண்டித்து வரும் 22ம்தேதி 10 தொழில் நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது என்று இடதுசாரி கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ(எம்.எல்)லிபரேசன் மாநில செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2024 ஜனவரி மாதத்தில் அமெரிக்க அரசின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், சர்வதேச சட்ட நெறிமுறைகளையும், கோட்பாடுகளையும் நிராகரித்து மேலாதிக்க வெறி பிடித்து செயல்பட்டு வருகிறார். இதனால் பல நாடுகள் அமைதியிழந்து வருகின்றன. இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது.

இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டுமென மிரட்டுகிறது. இந்தியாவும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் அளவை குறைத்துக் கொண்டு வருகிறது. இருப்பினும் அமெரிக்க அரசு, இந்தியாவின் ஏற்றுமதி பொருட்கள் மீது 50 சதவீத கூடுதல் வரி விதித்தது. இதனால், இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதித்து வருகிறது.

அண்மையில் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்க வழி வகுக்கும் ரஷ்ய தடைகள் மசோதாவை, தனது குடியரசு கட்சி உறுப்பினர் மூலம் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், ஈரான் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு வரும் அமெரிக்க நிர்வாகம், ஈரானுடன் வர்த்தகம் செய்து வரும் நாடுகள் மீது, மேலும் 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்துள்ளது. இதனால், இந்தியா கடுமையாக பாதிக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் தொடர்ந்தால் விளைவு பயங்கரமாக இருக்கும் என நேரடியாக டிரம்ப் இந்தியாவை மிரட்டியுள்ளார்.

அமெரிக்காவின் அத்துமீறல் குறித்தும், அடாவடித்தனம் குறித்தும் இந்தியா இதுவரை வாய் திறந்து பேசாமல், அமைதி காத்து வருவது, நமது அயலுறவுக் கொள்கைக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இதனை நாட்டு மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கும், மிரட்டலுக்கும் கண்டனம் தெரிவிக்கும் முறையில், இந்த 3 கட்சிகளும் இணைந்து வரும் 22ம்தேதி சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 10 தொழில் நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: