சென்னை: பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயிற்று மொழியாக தாய்மொழியே இருக்க வேண்டும். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரி என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ‘சமத்துவ பொங்கல்’ கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், சென்னை ஐஐடி வளாகத்தில் நேற்று பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது பொங்கல் வைத்து, பொங்கல் பானை மற்றும் சூரியனுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
ஐஐடி மெட்ராஸ், முத்தமிழ் மன்றம் மற்றும் ஊழியர் மன்றம் இணைந்து நடத்திய பொங்கல் விழாவில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பொங்கல் வைத்தார். தொடர்ந்து, சென்னை ஐஐடியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அடுத்த மாதம் ஏஐ தாக்க உச்சி மாநாடு (AI summit) இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிரதமர் தலைமையில் டெல்லியில் நடைபெற இருக்கிறது. கல்வித்துறையில், ஏஐ எப்படி தங்களது பாடத்திட்டத்தில் கொண்டு வருவது என்பது தொடர்பாக கல்வி நிறுவனங்கள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பள்ளியில் இருந்து, ஆராய்ச்சி வரை மாணவர்களுக்கான பயிற்று மொழி தாய்மொழியில் இருக்க வேண்டும். இதனை எல்லா இந்தியக் கல்வி நிறுவனங்களிலும் கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
