சென்னை: முதல்வரை மீண்டும் அரியணையில் ஏற்ற பொங்கல் திருநாளில் உறுதி ஏற்போம் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பகுதி திமுக நிர்வாகிகள், வட்ட நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அணிகளின் மாவட்ட பகுதி அமைப்பாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என சுமார் 2,500 பேருக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையில் உள்ள தனியார் தொழில் கல்லூரியில் நடந்தது.
திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினரும், துணை அமைப்பு செயலாளருமான தாயகம் கவி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘பல்வேறு பொறுப்புக்களில் இருந்து தொடர்ந்து இந்த இயக்கத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கின்ற உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மீண்டும் உதயசூரியனை அரியணையில் ஏற்றவும், தமிழக முதல்வர் யாரை வேட்பாளராக அனுப்பினாலும் அவர் அனுப்புகின்ற வேட்பாளரை சட்டமன்ற உறுப்பினராக மாற்றும் களப்போராளிகள் உங்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து இந்த நிகழ்ச்சியை சீரோடும் சிறப்போடும் எழுச்சியோடும் நடத்திய சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்ட உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
2026ம் ஆண்டு களத்தில் உறுதியாக நின்று 200 அல்ல 200 தாண்டி நிச்சயம் தமிழகத்தில் மக்கள் நம் முதல்வரை அரியணையில் அமர்த்துவதற்கும், சட்டமன்ற தலைவராக அவரை தேர்வு செய்வதற்கும் இந்த நேரத்தில் நாம் உறுதி ஏற்க வேண்டும்’ என்றார். நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர் சரிதா, பகுதி செயலாளர்கள் தமிழ்வேந்தன், சாமி கண்ணு, தொகுதி தேர்தல் பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சரவணன், வட்ட செயலாளர்கள் அபோய், டீக்கா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
