சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் உரிய சட்டம் கொண்டுவருமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரை சேர்ந்த மாற்றுத் திறனாளியான கே.மணிவண்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 2 கோடியே 68 லட்சம் மாற்றுத் திறனாளிகள் நாட்டில் இருப்பதாக ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கு முறையான கல்வி, உயர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 4 சதவீத இட ஒதுக்கிடு வழங்கியும் முறையாக கிடைக்கவில்லை.
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திடம் கடந்த 2023, 2024ம் ஆண்டுகளில் மனுக்கள் அனுப்பினோம். அதற்கு, பதிலளித்த தேர்தல் ஆணையம், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும், தொகுதி மறுவரையறை சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை என்று கூறியுள்ளது.
எனவே, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் தனிச் சட்டம் கொண்டுவருமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,’என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
