நொச்சி இலையின் மகத்துவம்!

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழ்நாட்டில் மிகவும் பழமையான மருத்துவ மூலிகைகளில் நொச்சி இலையும் ஒன்றாகும். சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேதத்திலும் இது சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. பண்டைய காலங்களில் கிராம வீடுகளில் நொச்சி செடியை வளர்ப்பது வழக்கமாக இருந்தது. இதன் இலை, பூ, விதை, வேர்கள் என அனைத்தும் மருத்துவப் பயன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக காய்ச்சல், மூட்டு வலி, தோல் நோய்கள், தலைவலி போன்றவற்றுக்கு நொச்சி இலை முக்கியமான மருந்தாக விளங்கியது.

நொச்சி இலையின் வாசனை நச்சுப் புழுக்களை விரட்டும் தன்மை கொண்டதால், இது இயற்கை பூச்சிக்கொல்லியாகவும் பயன்பட்டது. புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர்.

காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது.நொச்சி இலையுடன் வெல்லம் சேத்து கசாயம் செய்து குடித்து வந்தால் உடல் சூடு தணிந்து, உடல் பலம் பெருகும். அரை தேக்கரண்டி நொச்சி இலைச் சாறு, அரை தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க காய்ச்சல் தீரும்.சிறிது நொச்சி இலை, மிளகு, பூண்டு, இலவங்கம் சேர்த்து மென்று தின்றால் இரைப்பு நோய் தீவிரம் குறையும்.

தாவரவியல் பெயர்: Vitex negundo
குடும்பம்: Lamiaceae (பழைய பெயர்: Verbenaceae)
நொச்சி செடி வெப்பமான மற்றும் உலர்ந்த காலநிலையிலும் நன்றாக வளரக்கூடியது.

ஊட்டச்சத்து விவரங்கள்

100 கிராம் கீரையில், புரதம்- 4.2 g, நார்ச்சத்து-5.8 g, கால்சியம்-230 mg, இரும்பு- 18 mg, வைட்டமின் சி- 55 mg,பீட்டா-கரோட்டின்- 720 mg உள்ளது.

மருத்துவ குணங்கள்

*வலி நிவாரணி மூட்டு வலி, தலைவலி குறைக்கும்.

*அணு எதிர்ப்பு காயங்களில் கிருமி தொற்று தடுக்கிறது.

*நச்சு எதிர்ப்பு பாம்பு, புழு, பூச்சி கடி விஷத்தைக் குறைக்கிறது.

*காய்ச்சல் நிவாரணி சளி, காய்ச்சல் குறைக்கும்.

*தோல் நோய் குணப்படுத்தி புண்கள், சொறி, எரிச்சல் நீக்கும்.

*இலைச்சாறு தேன் கலந்து குடிப்பது காய்ச்சல் குறைக்கும்.

*இலை விழுது பத்து போட்டால் வீக்கம், வலி குறையும்.

சமையல் பயன்பாடுகள்

*நொச்சி இலை நேரடி உணவாக அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால் மூலிகை பானங்கள் மற்றும் மருந்து கஷாயங்களில் பரவலாக சேர்க்கப்படுகிறது.

*நொச்சி இலை கஷாயம் காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி குறைக்க.

*நொச்சி தண்ணீர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.

கீரையின் பயன்கள்

குழந்தைகள்: சளி, இருமல் தடுக்கும்.

கர்ப்பிணிகள்: மூட்டு வலி குறைக்கும், உடல் நோய் எதிர்ப்பு மேம்படும்.

முதியவர்கள்: மூட்டு வலி, நரம்பு வலி குறைக்கும், உடல் சக்தி அதிகரிக்கும்.

தொகுப்பு: ரிஷி