தினகரனை போனில் பேசி மிரட்டி கூட்டணிக்கு பணிய வைத்த அமித்ஷா: பரபரப்பு தகவல்கள்

 

திருச்சி: அமமுக பொது செயலாளர் தினகரனிடம், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா போனில் பேசி மிரட்டி கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து தினகரன் டெல்லி சென்று ரகசியமாக அமித்ஷாவை சந்தித்து பேசி உள்ளார். விரைவில் அமமுக அதிமுக-பாஜ கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக-பாஜ கூட்டணியில் சமீபத்தில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்தது. தற்போது அந்த வரிசையில் அமமுகவும் இடம் பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் தஞ்சையில் கடந்த 5ம் தேதி பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தினகரன் பேசுகையில்,‘‘தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. அது என்றைக்கும் தொடர வேண்டும். சாதி, மதம், கடவுள்களின் பெயரை எந்தவொரு அரசியல் இயக்கமும், பயன்படுத்தி இங்கு வாழும் மக்களிடம் குழப்பம் ஏற்படுத்தி விடக்கூடாது. தேர்தலுக்கு தயாராகுங்கள். கூட்டணி பற்றி எல்லாம் யாரும் கவலைபட வேண்டாம். தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி என்றெல்லாம் என் கண்களுக்கு தெரியாது என்றார்.

தினகரன் பேசுவதற்கு முன்பு, உதவியாளர் ஒருவர் அவசர அவசரமாக ஓடி வந்து அவரிடம் செல்போனை கொடுத்துள்ளார். எதிர் முனையில் பேசியவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. தினகரன் போனை வாங்கி கொண்டு தனியாக சென்று பேசினார். ஓ.கே… சார்… ஓ.கே…சார்… என்ற வார்த்தையை மட்டும் அவர் பயன்படுத்தினாராம். பின்னர், மேடைக்கு வந்து அமர்ந்தார். சிறிது நேரத்தில் மீண்டும் அமித்ஷாவிடமிருந்து போன் வந்துள்ளது. அப்போதும் தனியாகவே சென்று மெல்லிய குரலில் பேசி உள்ளார். பின்னர் மேடைக்கு வந்த தினகரன், இறுகிய முகத்துடன் இருந்துள்ளார்.

போனில் பேசுவதற்கு முன்பு, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும் என கூறி வந்த தினகரன், போனில் பேசிய பிறகு, எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்க வேண்டாம் என நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக தெரிகிறது. இதைக்கேட்டு அமமுக நிர்வாகிகளே அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அமமுக நிர்வாகிகள் கூறுகையில்,‘‘தஞ்சையில் மீட்டிங் நடக்கும் போது, 2 முறை அவசர அவசரமாக தினகரன் போன் பேசினார். போனில் பேசிய பிறகு, அவரது நடவடிக்கையில் வித்தியாசம் தெரிந்தது. குறிப்பாக, அடிக்கடி துரோகி என எடப்பாடி பழனிசாமியை சொல்லி வந்த தினகரன், அதிமுக குறித்து இனி பேச வேண்டாம் என கூறினார்.

ஜன.5ம் தேதி தஞ்சையில் அமமுக பொதுக்குழு கூட்டம் நடக்கும் போது, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சியில் தான் தங்கியிருந்தார். புதுக்கோட்டை மற்றும் திருச்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமித்ஷா சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தமிழக பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தினகரன் குறித்து பாஜ தலைவர் ஒருவர் பேசியுள்ளார். தொடர்ந்து, நீங்கள் பேசினால், கூட்டணிக்கு அவர் வந்து விடுவார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, தமிழக பாஜக நிர்வாகி ஒருவர், தன்னுடைய போனில் இருந்து தினகரனை தொடர்பு கொண்டார். பின்னர், அமித்ஷா அந்த போனில் பேசியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் தினகரன் புதுச்சேரி சென்று, அங்கிருந்து பெங்களூரு சென்று, பெங்களூருவில் இருந்து டெல்லி சென்று, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், உங்கள் மீதான வழக்குகளை தூசி தட்ட நேரிடும் என மிரட்டும் தொனியில் அமித்ஷா மீண்டும் கூறியதாக தெரிகிகிறது. இதையடுத்து, நீங்கள் சொல்வதை நான் கேட்கிறேன் என தினகரன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன் அதிமுக-பாஜக கூட்டணியில் அமமுகவும் சேரலாம். அதே சமயம் அதிமுகவுடன் கூட்டணிக்கு, அமமுக நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் தினகரன் இறங்கி உள்ளார் என்றனர்.

Related Stories: