வளைகுடாவில் பாதிக்கப்பட்ட 1 கோடி இந்தியருக்கு உதவ கட்டுப்பாட்டு அறை திறப்பு

புதுடெல்லி: போர் காரணமாக வளைகுடாவில் பாதிக்கப்பட்ட 1 கோடி இந்தியர்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகம் கட்டுப்பாட்டு அறையை திறந்துள்ளது. ஈரான் போர் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன், குவைத், ஜோர்டான், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பே இந்தியாவுக்கு மிகவும் முன்னுரிமையானது என வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தது. போர் தொடர்ந்து தீவிரமாகி வருவதால் ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அந்நாட்டு தலைநகர் டெஹ்ரானில் இருந்து நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றி இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டு அறையை வெளியுறவு அமைச்சகம் நேற்று திறந்துள்ளது. அதன் அறிக்கையில், ‘‘வளைகுடா நாடுகளில் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800118797, +91 11 2301 2113, +91 11 2301 4104, +91 11 2301 7905 என்ற எண்ணில் கட்டுப்பாட்டு அறையை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்பு கொள்ளலாம்,” என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: