தூத்துக்குடி, ஜன. 9: தூத்துக்குடியில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஹசீஷ் போதைப் பொருள் பதுக்கிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு இளம்பெண்ணை நேற்று போலீசார் கைது செய்தனர். போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி சிலம்பரசன் உத்தரவின் பேரில், தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி (பொ) ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தூத்துக்குடி ஜார்ஜ்ரோடு மற்றும் கோவில்பிள்ளை விளை பகுதிகளில் உள்ள 2 வீட்டில் அடுத்தடுத்து சோதனை நடத்தினர். அப்போது 2 வீடுகளிலும் போதைப்பொருளான ஹசீஷ் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 7.5 கிலோ எடையிலான ஹசீஷ் எனப்படும் கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக ஜார்ஜ்ரோடு சூசை மாதவன் மகன் மரியநவமணி ஸ்மைலன்(37), தாளமுத்துநகர் கோவில்பிள்ளை விளையை சேர்ந்த சேவியர் மகன் மரிய அந்தோணி ஜேசுசகாயராஜ்(38) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து செல்போன்கள், 2 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஹசீஷ் பதுக்கி வைத்து விற்பனை செய்ய உதவிய 2 பெண்களிடம் போலீசார் விசாரித்து வந்த நிலையில், தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் இளனீக் கிளைட்டன் மகள் பிரான்சிஸ் ஜூடி (22) என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கொக்கிரக்குளம் மகளிர் சிறையில் அடைத்துள்ளனர். இந்த போதைப்பொருள் பதுக்கலில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டு உள்ளனரா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
